- 149 -

வெளிப்படையாகக்  கூறிய அரசியின்  இழிசொல்லைக் கேட்டவுடன் தோழி  இருகாதுகளையும்  பொத்திக்கொண்டு,  ‘நின் மனத்தில்  என்று  மில்லாத  இப் புனைந்துரையைக் கூறியதற்குக்  காரணம்  என்ன?  என்று வினாவினா ளென்க.

இவர்தல் - படர்தல், வியாபித்தல், குழலி, அண்மை விளி. தான், அசை.        (27)

அரசி ஆற்றாமையால் உயிர்விடுவேன் என்றல்.

100. மாளவ பஞ்ச மப்பண் மகிழ்ந்தவ னமுத வாயிற்
  கேளல னாயி னாமுங் கேளல1 மாது மாவி
  நாளவ மாகி யின்னே2 நடந்திடு நடுவொன் றில்லை
  வாளள வுண்கண்3 மாதே மறுத்துரை மொழியி னென்றாள்.

(இ-ள்.) ‘வாள்  அளவு உண்கண்  மாதே - வாள் போன்ற கூரியதும்  மை தீட்டப் பெற்றதுமாகிய  கண்களையுடைய மாதே,  அவன்  அமுதவாயில் - அப் பாடலைப்பாடியவனுடைய அமிர்தம் போன்ற வாயினால், மாளவ பஞ்சமப்பண் - மாளவபஞ்சமம் என்ற பண்ணை,  மகிழ்ந்து கேளலன் ஆயின் - மகிழ்ந்து கேட்கிலேனாயின், நாமும் கேள்  அலம் ஆதும் - நாமிருவரும் நட்பினரல்ல ராவோம்; உரை மறுத்து மொழியின் - என் உரையை மறுத்துச் சொல்வாயாயின்,  நாள் அவம் ஆகி - என்  வாழ்நாள் வீண்நாளாதலின்,  ஆவி இன்னே நடந்திடும் - என்  உயிரும் இப்பொழுதே நீங்கிவிடும்;  நடு ஒன்று  இல்லை -இவ்விரண்டிற் கிடையில் வேறொன்றும்   நிகழ்தற்கில்லை';  என்றாள் - என்று (தோழிக்குக்) கூறினாள்;  (எ-று.)

அரசி, தோழியை நோக்கி,  ‘அப் பண்ணைப் பாடியவனைக் கூடி மகிழ்ந்து பாடலைக் கேளேனாயின் என் ஆவி நடந்திடும'; என்றாள் என்க.

 

1 கேளலமாயி.

2 யின்றே.

3 வொண்கண்.