- 150 -

பண் மகிழ்ந்து கேட்டல், அல்லது ஆவி நடந்திடுதல் இவ் விரண்டையுத் தவிர, வேறுவித வாழ்க்கை யில்லை யென் பாள் ‘நடுபொன்றில்லை‘ என்றாள்.            (28)

அரசி தன் எண்ணத்திற்குத் தோழி மறுத்துக்
கூறாவண்ணம் புகழுதல்.

101. என்னுயிர்க் கரண நின்னோ டின்னிசை  புணர்த்த1 காளை
  தன்னின்மற் றொருவ ரில்லை தக்கது துணிக வென்ன
  என்னுயிர்க்2 கேத மெய்தி னிதுபழி பெருகு மென்றே
  துன்னும்வா யவளோ டெண்ணித்3 தோழியு4 முன்னி னாளே.

(இ-ள்.) ‘என் உயிர்க்கு அரணம் - என் உயிருக்குக் காவலாகின்ற, நின்னோடு - உன்னோடு,  இன்னிசை புணர்த்த - இனிய இசையினால் என்னைப் பிணித்த,  காளைதன்னின்-காளையினும், மற்றொருவர் இல்லை - வேறொருவர் எனக்கு ஆவார் இல்லை;  என் உயிர்க்கு -என் உயிருக்கு, ஏதம் எய் தின்-கேடு வருமாயின், இது பழி பெருகும் என்று -இப்பழி பெருகிப் பரவும் என்று  சொல்லி,  தக்கது துணிக -(இதற்குச்) செய்யத்தக்க தொன்றைத் துணிவாயாக‘ என்ன-என்று  அரசி கூற, துன்னும் வாய் -அவ் விசைய வனைக் கிட்டும் வழியை,  அவளோடு - அவ் வமிர் தமதியோடு தோழியும் - குணவதியும்,  எண்ணி - ஆராய்ந்து,  உன்னினாள்-(பின் தனக்குள்ளே)  சிந்தித்தாள்;  (எ-று.)

‘என் உயிர்க்குப் புகலாவார் நீயும் அவ் விசையவனுமே;  அவனை அடைவதற்கு நீயே துணையாக வேண்டும்; நீ இணங்காவிடின்,  என் உயிர் நீங்கும்;  அப் பழி உன்னையே சாரும்.  ஆகவே, உனக்கு எது தகுதியோ, அதனைச் செய்வாயாக‘  என்று அரசி கூற, தோழி  வேறு வழியின்றி அவ்விசையவனை அடையும்மார்க்கத்தை  உன்னினா ளென்க. இனி, அரணம் என்பதற்கு ரக்ஷகராவார் எனலுமாம்.            (29)

 

1 யுணர்த்த.

2 யின்னுயிர்க்.

3 டொன்றி.

4 துன்னினாளே.