தெய்வத் திருவருளை நிரம்பப் பெற்ற திருநெல்வேலி திருச்சபையின் வளமிக்க வரலாற்று விவரங்களை, அவை கிடைக்குமிடங்களிலெல்லாம் துருவியாராய்ந்து வருங்காலை, அரும்பெரும் புதையலொன்றைத் தமிழ்ச் சபைத் தீபிகை யென்னும் மாதப் பத்திரிகையின் பழைய பிரதிகளிற் கண்டோம். அப்புதையல் காலஞ்சென்ற ராவ்சாகிப் மறைதிரு M. ஆசிர்வாதம் ஐயரவர்கள் நாற்பதாண்டுகளுக்கு முன் எழுதி வெளியிட்டிருந்த கவிநயம் மிக்க செய்யுட்களாம். அவை பல ஆண்டுகளாக மாதந்தோறும் வெளிவந்து கொண்டிருந்தவையென்றும் கண்டோம். அவற்றை வாசித்து, அவற்றில் செறிந்துள்ள நயங்கள் பலவற்றைக் கண்டு வியப்பு மிக்குற்றோம். 'கிறிஸ்தவக் கம்பன்' கிருஷ்ணப்பிள்ளை என்றொருவரைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளோம்; அவர் தம் புலமை மகிமையைத் துய்த்தனுபவித்தோம்; ஆண்டுகள் பல பத்து பறந்தோடியும், பிள்ளையவர்களைப் பின்பற்றி வேறொரு கவியெவரையும் நெல்லைக் கிறிஸ்தவம் பிறப்பிக்கவில்லையே என்று பலருடன் நாமும் ஏங்கி நின்ற துண்டு. ஆயின், 'ஏங்கத் தேவையில்லை; ஏற்கனவே ஏகன் எழுப்பிவிட்டார் இயேசு நாதரின் இன்புகழ் பாடும் கவியொருவரை; அவர்தாம் ஆண்டவரின் அருமைச் சீடரும் தொண்டருமான அருள்திரு. M. ஆசீர்வாதம் ஐயரவர்கள் என்று கண்டோம்; கண்டு அக மகிழ்ந்தோம்! ஆனால், மறுகணமே கலங்கி நின்றோம்! திருநெல்வேலி திருச்சபையின் வரலாற்று வானினின்று மறைந்துவிட்ட 'ஒளிவீசும் மாணிக்க மணிகள்' விட்டுச்சென்ற அடிச்சுவடுகள் காலத் தடங்களினின்று மறைவதைக்கண்டு மனமடிவுற்று, அவற்றில் சிலவற்றையாவது மறையவிடாது காப்பாற்றுவான்வேண்டி, அச் சிலவற்றை, 'மறைவிருந்த மாணிக்கக் கற்கள்' (முதலாம், இரண்டாம் பாகங்கள்) என்ற நூல் மூலம் மறுபடியும் இலங்கவைத்த யாம், ஐயரவர்களின் கவிகளும் பிற எழுத்துகளும் 'மறைந்த மாணிக்கங்களா' கிப், பயனற்றுப் போய்விடக்கூடாதே என்று ஆசித்து, அவற்றைப்பற்றி யாமறிந்த செய்திகளை அப்பெரியாரின் அருமருந்தன்ன மைந்தரும் எம் இனிய நண்பருமான திரு. ஆர்தர் ஆசீர்வாதம் அவர்களிடம் கூறி, "நெல்லைக் கிறிஸ்தவமும், பாளையம்பதிச் சபையும் கிறிஸ்தவ உலகுக்கும் தமிழ் மொழிக்கும் சீரிய சேவையாற்றியுள்ள மறைதிரு. M. ஆசீர்வாதம் ஐயரவர்கள் என்றும் 'இரண்டாம் கிறிஸ்தவக் கம்பனை' ஈன்று தந்துவிட்டன என்பதை இத்தலைமுறையினர்க்கு வெளிப்படுத்தி, ஐயரவர்களின் படைப்புகளை வெயிட்டு, அவற்றினால் வரும் |