கணபதி துணை தமிழ்நெறி விளக்கம் பொருளியல் பொருளின் வகை 1. | அகத்ததும் புறத்தது மாயிரு பகுதியின் மிகுத்தது மாகி விரிந்தது பொருளே. |
என்பது, நிறுத்த முறையானே பொருளிலக்கணம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. எனவே இவ்வோத்துப் பொருளியல் என்பதாயிற்று. (இதன் பொருள்.) அகத்தினாகிய அகப்பொருளும், புறத்தினாகிய புறப்பொருளும், ஆயிருவகையினுமாகிய அகப்புறப்பொருளுமென மூவீற்றதாய்ப் பல்வேறு வகைப்பட்ட துறைகளாற் பரப்புடையது பொருளாமென்றவாறு. (வீறு-வேறுபாடு.) புறச் செய்கை உளதெனினும் மிகுதிவகையால் அகம்பற்றி நிகழ்தலின் இருதலையும் தீரா அன்பிற்றாகிய காமம் அகப்பொருளென்பது. அகநிகழ்ச்சி உளதெனினும் மிகுதிவகையாற் புறச்செய்கையால் நிகழ்தலிற் குற்றப்பாடில்லா மறம் புறப்பொருளென்பது. அகமல்லா இன்பமும் புறமல்லாப் பொருள்செயல் வகையும் அறமும் அதன் பயனாகிய வீடும் இருவகை நிகழ்ச்சியும் நோக்கிக் கோடலின் அகப்புறப் பொருளெனப்பட்டனவென்பது. (1) அகப்பொருள் 2. | முதல் கருவணைந்த வுரிப்பொரு ளகமே. |
(எ-து.) சொல்லப்பட்டனவற்றுள் அகப்பொருள்ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) முதலுங் கருவுஞ் சார்ந்த உரிப்பொருள்அகப்பொருளா மென்றவாறு. |