பக்கம் எண் :
 
சொல்லணியியல்197

பன - பெருக்குவன, கோந - வேற்றரசருடைய, கரங்களே - திறைகளை, மே அளக்கர் - பொருந்திய கடலானது, வியன் திரை - பெரிய திரையோடும், வேலை சூழ் கோ - கரையோடும் சூழப்பட்ட நிலவலயத்தை, வளர்ப்பன - காப்பன, கோந - இச் சோழனுடைய, கரங்கள் - கைகள் எ - று.

கரம் - திறை. கோ - சோழன். இதில் 'கோவ ளர்ப்பன கோநக ரங்களே' என்ற சொற்றொடர், மூன்றாமடி யொழிய மற்றைய மூன்றடிகளிலும் மடங்கி வருதல் காண்க.

இவை நான்கும் மூன்றடி மடக்கு.

இனி, நான்கடி மடக்கு வருமாறு :-

நான்கடியும் மடக்கு

எ - டு :

'வான கந்தரு மிசைய வாயின
வான கந்தரு மிசைய வாயின
வான கந்தரு மிசைய வாயின
வான கந்தரு மிசைய வாயின'

 இ - ள் : வானம் - மேகம், கம்தரு - கடலினிடத்திற் கொடுக்கும், இசைய ஆயின - ஓசையோடுகூடியிருந்தன, வான் - ஆகாயத்தை, அகம்தரும் - வவ்விக்கொள்ளும், மிசைய ஆயின - எழுச்சியை யுடையவாயின, வானகம் - விண்ணுலகத்தை, தரும் - ஒக்கும், இசைய ஆயின - புகழையுடையன, தரு மிசைய ஆயின - மரங்களை உச்சியிலே உடையன, வால் நகம் - பெரிய மலைகள் எ - று.

இதில் நான்கடிகளும் ஒரேவிதமாக மடங்கினமை யுணர்க. இஃது ஏகபாதமுமாம்.

(வி - ரை)ஏகபாதம் - ஒரு அடி. பாதம் - அடி; 'அந்தமில் பாதம்' (யாப் - 27) என்றவிடத்தும் இப்பொருளாதல் அறிக. ஒரே அடி. நான்கடியாக மடங்கிவரின் அது ஏகபாதமாம்.

'பிரம புரத்துறை பெம்மான் எம்மான்
பிரம புரத்துறை பெம்மான் எம்மான்
பிரம புரத்துறை பெம்மான் எம்மான்
பிரம புரத்துறை பெம்மான் எம்மான்'

என்ற திருஞானசம்பந்தர் பாடலும் இதன்பாற்படும்.

ஒரு சொல்லானே நான்கடியும் மடக்குவதனை, இயமாஇயமகம் என்ப.

எ - டு :

'உமாதர னுமாதர
னுமாதர னுமாதர
னுமாதர னுமாதர
னுமாதர னுமாதரன்'

 இ - ள் : உமா - உமையை, தரனும் - தரித்தவனும், ஆதரனும் - ஆதரிக்கின்றவனும், மா தரனும் - மானைத்தரித்தவனும், மாதரனும் - திருவைத் தரித்தவனும், ஆ தரனும் - ஆனிரையைக் காத்தவனும், மா தரனும் - யானைத் தோலைத் தரித்தவனும்,