“குன்ற நாடன் குன்றத்துக் கவாஅற் பைஞ்சுனைப் பூத்த பகுவாய்க் குவளையு மஞ்சி லோதி யசையியற் கொடிச்சி கண்போன் மலர்தலு மரிதிவ டன்போற் சாயன் மஞ்ஞைக்கு மரிதே1 (ஐங்குறு-299) இஃது இருவரும் உள்வழி வந்த தலைவன் தலைவி தன்மை கூறவே இவள் கண்ணது இவன் வேட்கையென்று தோழி குறிப்பான் உணரக் கூறியது. குன்றநாடன்-முருகன்-அவள் தந்தையுமாம். “உள்ளிக் காண்பென் போல்வன் முள்ளெயிற் றமிழ்த மூறுஞ் செவ்வாய்க் கமழகி லார நாறு மறல்போற் கூந்தற் பேரமர் மழைக்கட் கொடிச்சி மூரன் முறுவலொடு மதைஇய நோக்கே”2 (குறுந்-286) இதுவும் அது. இது முதலியவற்றைத் தலைவன் கூற்றாகவே கூறாது தோழி கூறினாளாகக் கூறி அவ்விடத்துத் தலைவன் மடன்மா கூறுமென்று பொருள் கூறின் ‘நாற்றமும் தோற்றமும் (114) என்னுஞ் சூத்திரத்துத் தோழி இவற்றையே கூறினாளென்றல் வேண்டாவாம். அது கூறியது கூறலாமாகலின். தண்டாது இரப்பினும்-இடந்தலைப்பாடு முதலிய கூட்டங்களான் அமையாது பின்னும் பகற் குறியையும் இரவுக் குறியையும் வேண்டினும்.
ரன்ன மேனியையும் உடைய தோழியே! என் பண்பினையும் தூக்கத்தையும் தான் கொண்டு எனக்கு அவை இல்லையாம்படிச் செய்தாள் நின் தோழி அதற்கு யான் செய்த தவறு யாது? 1. கருத்து: மலைநாடன் மலையிற் சுனைக்கண் பூத்த குவளையானது கொடிச்சியின் கண்போல் மலர்தல் அரிது. மயிலுக்கும் இவள் சாயல்போல் அமைதல் அரிது. 2. கருத்து: முள் எயிறு செவ்வாய் அறல்போற் கூந்தல் மழைக்கண் ஆகியவற்றையுடைய கொடிச்சியின் மூரலை முறுவலையும் மதைய நோக்கத்தையும் இன்று நினைத்துப் பார்த்து மகிழ்வேன். |