பக்கம் எண் :

12தொல்காப்பியம்-உரைவளம்

மாட்டு நிகழ்வது. ஈண்டுக் காமக் கூட்டமென ஓதப்பட்டது மணவிகற்பமாகிய எட்டனுள்ளுங் கந்திருவ மென்றவாறு. மாலை சூட்டல்1 யாதனுள் அடங்குமெனின், அதுவும் ஒத்த அன்பினராய் நிகழ்தலிற் கந்திருவப்பாற்படும்.

அறனும் பொருளும் இன்பமும் என்னாது இன்பமும் பொருளும் அறனும் என்றது என்னை எனின், பலவகை உயிர்கட்கும் வரும் இன்பம் இருவகைப்படும். அவையாவன, போகம் நுகர்தலும் வீடுபெறுதலும் என. அவற்றுள் வீடுபேறு துறவறத்தில் நின்றார்க்கல்லது எய்தல் அரிதாயிற்று. போக நுகர்தல் மனை யறத்தார்க்கெய்துவது. அவரெய்தும் இன்பமும் அவ்வின்பத்திற்குக் காரணமாகிய பொருளும் அப்பொருட்குக் காரணமாகிய அறனும் எனக்காரிய காரணம் நோக்கி வைத்தார் என்க.

இதனாற் சொல்லியது ஈண்டுக் களவென்றோதப்படுகின்ற ஒழுக்கம் அறம்பயவாத புறநெறியன்று, வேதவிதியாகிய தந்திரம் என விகற்பமாகிய நெறி கூறியவாறு. 2

நச்சினார்க்கினியர்

இவ்வோத்துக் களவு கற்பென்னுங் கைகோள் இரண்டனுள் களவு உணர்த்தினமையிற் களவியலென்னும் பெயர்த்தாயிற்று; பிறர்க்குரித்தென்று இருமுதுகுரவராற் கொடை யெதிர்ந்த தலைவியை அவர் கொடுப்பக் கொள்ளாது இருவருங் கரந்த உள்ளத்தோடு எதிர்ப்பட்டுப் புணர்ந்த களவாதலின் இதுபிறர்க்குரிய பொருளை மறையிற் கொள்ளுங் களவன்றாயிற்று. இது வேதத்தை ‘மறைநூல்’ என்றாற்போலக் கொள்க. 3


1. முதற் காட்சியில் தலைவன் தலைவிக்குத் தன் மாலையை அணிந்து புணர்ச்சியின்றி நீங்கல்.

2. தந்திரம்-நூல்; அது ஒழுக்கத்தை யுணர்த்தும். வேத நெறியாகிய ஒழுக்கம் என அறத்தின் வகை கூறியவாறு.

3. எளிதில் யார்க்கும் புலப்படாமல் நுண்ணியவாக மறைந்து கிடக்கும் பொருள்கள் மறை எனப்பட அவற்றைக் கூறும் நூல் (வேதம்) மறை எனப்பட்டது.