பக்கம் எண் :

களவியல் சூ. 113

“களவெனப்படுவதியாதென வினவின்
வளை கெழு முன்கை வளங்கெழு கூந்தன்
முளையெயிற் றமர்நகை மடநல் லோளொடு
தளையவிழ் தண்டார்க் காமன்னோன்
விளையாட்டிடமென வேறு மலைச் சாரன்
மானினங் குருவியொடு கடிந்து விளையாடு
மாயமுந்தோழியு மருவிநன் கறியா
மாயப் புணர்ச்சி யென்மனார் புலவர்”

இக்களவைக் ‘காமப்புணர்ச்சியும்’ (187) என்னுஞ் செய்யுளியற் சூத்திரத்திற் கூறிய நான்கு வகையானும்1 மேற்கூறுமாறு உணர்க.

இன்பத்திற்குப் பொதுவிலக்கணம் அகத்திணையியலுட் கூறி, அதற்கினமாகிய பொருளும் அறனுங் கூறும் புறத்திணையை அதன் புறத்து நிகழ்தலிற் புறத்திணையியலுட் கூறி, ஈண்டு அவ்வின்பத்தினை விரித்துச் சிறப்பிலக்கணங் கூறுதலின் இஃது அகத்திணையியலோடு இயைபுடைத்தாயிற்று.

‘வழக்கு...நாடி’ என்றலின் இஃது உலகியலெனப்படும்; உலகத்து மன்றலாவது குரவர் கொடுப்பதற்கு முன்ன ஒருவற்கும் ஒருத்திக்குங் கண்ணும் மனமுந் தம்முள் இயைவதேயென வேதமுங் கூறிற்றாதலின்.

இச்சூத்திரங் களவெனப்பட்ட ஒழுக்கம் உலகத்துப் பொருள் பலவற்றுள்ளும் இன்பம் பற்றித் தோன்றுமெனவும் அஃது இன்னதாமெனவுங் கூறுகின்றது.

(இதன் பொருள்.) இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு - இன்பமும் பொருளும் அறனுமென்று முற்கூறிய மூவகைப் பொருள்களுள், அன்போடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்-ஒருவனொடு ஒருத்தியிடைத் தோன்றிய அன்போடு கூடிய இன்பத்தின் பகுதியாகிய புணர்தன் முதலிய ஐவகை


போல பிறர்க்குப் புலப்படாமல் தம்முள் காதலர் இருவர் மறைவாகக் கொள்ளும் ஒழுக்கம் களவு எனப்பட்டது. பிறர் பொருளை மறைவிற் கொள்ளும் களவு போன்றதன்று இக்களவு.

1. நான்கு வகை. இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம், பாங்கியிற் கூட்டம்.