ஒழுக்கத்தினுள்: காமக் கூட்டங் காணுங்காலை-புணர்தலும் புணர்தனிமித்தமு மெனப்பட்ட காமப் புணர்ச்சியை ஆராயுங் காலத்து, மறை ஓர் தேஎத்து1 மன்றல் எட்டனுள்-வேதம் ஓரிடத்துக் கூறிய மண மெட்டனுள், துறை அமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பு-துறை அமைந்த நல்யாழினையுடைய பிரிவின்மையோரது தன்மை (என்றவாறு), அன்பாவது, “அடுமரந் துஞ்சு தோளாட வருமாய்ந்த படுமணிப் பைம்பூணவருந்-தடுமாறிக் கண்ணெதிர் நோக்கொத்த காரிகையிற் கைகலந் துண்ணெகிழச் சேர்வதாமன்பு”.2 மன்றல் எட்டாவன: பிரமம், பிராசாபத்தியம், ஆரிடம், தெய்வம், காந்தருவம், ஆசுரம், இராக்கதம், பைசாசம் என்பன. அவற்றுட் பிரமமாவது; ஒத்த கோத்திரத்தானாய் நாற்பத் தெட்டியாண்டு பிரமசரியங் காத்தவனுக்குப் பன்னீராட்டைப் பருவத்தாளாய்ப் பூப்பு எய்தியவளைப் பெயர்த்து இரண்டாம் பூப்பு எய்தாமை அணிகலன் அணிந்து தானமாகக் கொடுப்பது; “கயலே ரமருண்கண் கன்னிப் பூப்பெய்தி யயல் பேரணிகலன்கள் சேர்த்தி-யியலி னிர லொத்த வந்தணற்கு நீரிற் கொடுத்தல் பிரமமண மென்னும் பெயர்த்து.” பிராசாபத்தியமாவது: மகட்கோடற்கு உரிய கோத்திரத்தார் கொடுத்த பரிசத்து இரட்டி தம் மகட்கு ஈந்து கொடுப்பது; “அரிமத ருண்க ணாயிழை யெய்துதற் குரியவன் கொடுத்த வொண்பொரு ளிரட்டி திருவின் றந்தை திண்ணிதிற் சேர்த்தி
1. மறையோர் தேஎத்து என்பதற்கு இளம்பூரணர் அந்தணர் நூலில் எனப்பொருள் கொள்ள, நச்சினார்க்கினியர் மறை ஓர் தேஎத்து எனப்பிரித்து வேதம் ஓர் இடத்து எனப் பொருள் கொண்டமை காண்க. 2. பிறரைக் கொல்லும் சிலை மரத்தாலான வில் தொங்கும் தோளுடைய ஆடவரும் மணிப்பூணுடைய மகளிரும் எதிர்ப்பட்டு இருவர் நோக்கும் ஒத்த அழகில் ஈடுபட உள்ளத்தை நெகிழச் செய்வதே அன்பாவது. |