கொடிச்சி செல்புற நோக்கி விடுத்த நெஞ்சம் விடலொல் லாதே” 1 (நற்றிணை-204) “இரண்டறி கள்விநங் காத லோளே முரண்கொ டுப்பிற் செவ்வேன் மலையன் முள்ளூர்க் கான நண்ணுற வந்து நள்ளென் கங்கு னம்மோ ரன்னள் கூந்தல் வேய்ந்த விரவுமல ருதிர்த்துச் சார்ந்துளர் நறுங்கதுப் பெண்ணெய் நீவி யமரா முகத்த ளாகித் தமரோ ரன்னள் வைகறை யானே”. 2 (குறுந்-312) எனவரும். அறிந்தோள் அயர்ப்பின் அவ்வழி மருங்கிற் கேடும் பீடுங் கூறலும்-மதியுடம்பட்ட தோழி நீர் கூறிய குறையை யான் மறந்தேனெனக் கூறுமாயின், அவ்விடத்துத் தன்னொடு கூடாமையால் தலைவி மருங்கிற் பிறந்த கேட்டையும் அவள் அதனை ஆற்றியிருந்த பெருமையையுங் கூறுதலும், (உ-ம்) “ஒள்ளிழை மகளிரோ டோரையு மாடாய் வள்ளிதழ் நெய்தற் றொடலையும் புனையாய்
1. கருத்து: மடந்தையே! யான், நின் தந்தையின் கிளிகடி கருவியால் காக்கப்படும் தினைப் புனத்து பகல் மறையும் போது வரலாமா? முன்னே புணர்ந்த மலைச் சாரலில் மீளவும் விளையாட வரலாமா? நின் எயிற்றைச் சுவைப்பேன் என்று நான் அவளிடம் கூறவே, அவள் தான் குறித்த குறியிடம் என்னை அழைத்து வந்து நாளை கூடலாம் என்ற இனிய சொல்லைக் கூறி ஆணைப் பிரியும் பெண் மான் போல் சென்றவளின் புறம் பார்த்து நின்ற நெஞ்சமே! வந்து அவளை அப்போதே கூடியிருக்க வேண்டாவோ? விடலாமோ! 2. கருத்து: நெஞ்சே! நம் காதலி மாறுபட்ட இரண்டு நடத்தையுடைய கள்வியாவாள். ஒன்று நள்ளிரவில் மணம் கமழ நம்பால் வந்து பயிலுங்கால் முகத்தால் விரும்பி இனிது நோக்குவாள். காலையில் தம்மவரோடு பயிலுங்கால் நம்மைக் காண்புழி ஏதிலாள் போல விரும்பா முகத்தாளாகி நோக்குவள். இது மற்றொன்று. |