பக்கம் எண் :

124தொல்காப்பியம்-உரைவளம்

வுள்ளந் தாங்கா வெள்ள நீந்தி
யரிதயர் வுற்றனை நெஞ்சே நன்றும்
பெரிதா லம்மநின் பூச லுயர்கோட்டு
மகவுடை மந்தி போல
வகனுறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே”1      (குறுந்-29)

“பணைத்தோட் குறுமகள் பாவை தைஇயும்
பஞ்சாய்ப் பள்ளஞ் சூழ்ந்து மற்றிவ
ளுருத்தெழு வனமுலை யொளிபெற வெழுதிய
தொய்யில் காப்போ ரறிதலு மறியார்
முறையுடை யரசன் செங்கோல் வையத்
தியான்றற் கடவின் யாங்கா வதுகொல்
பெரிதும் பேதை மன்ற
வளிதோ தானே யிவ்வழுங்க லூரே”2      (குறுந்-276)

“உரைத்திசிற் றோழியது புரைத்தோ வன்றே
துருக்கங் கமழு மென்றோள்
துறப்ப வென்றி யிறீஇயரென் னுயிரே”3      (சிற்றட்டகம்)

மடன்மா கூறும் இடனுமாருண்டே - அச் சேட்படையான் மடலேறுவலெக் கூறும் இடனும் உண்டு என்றவாறு.

நோக்கி மடன்மா கூறுமென்க. உம்மையான் வரைபாய்வலெனக் கூறும் இடனும் உண்டென்றவாறு,

(உ-ம்)

“விழுத்தலைப் பெண்ணை விளையன் மாமடல்
மணியணி பெருந்தார் மார்பிற் பூட்டி


1. நெஞ்சமே! மழை நீரை ஏற்ற பசுமட் கலம் போல உள்ளம் தாங்கலாற்றாத ஆசை வெள்ளத்தில் நீந்தி நின்னால் பெறற்கரிய ஒன்றினை புகழ் நீங்கிப் பழிபரவுமாறு பெற விரும்புகின்றனை. அதற்குப் போராடவும் செய்கிறாய். அப்போராட்டம் நின் குறையை மரத்துள்ள மந்தி குட்டியை மார்புறத் தழுவிக் கொள்ளுமாறு போல மனம் கொளக் கேட்குநரைப் பெறுவையாயின் மிக நன்றாம்.

2. கருத்து பக்கம் 92-ல் காண்க.

3. கருத்து: உரைப்பாயாக, தோழீ! நீ சொல்வது சிறந்ததன்று. என் தோளை அவர் துறப்பர் என்றாய். அதனால் என் உயிர் போவதாக.