வெள்ளென் பணிந்துபிற ரெள்ளத் தோன்றி யொருநாண் மருங்கிற் பெருநா ணீக்கித் தெருவி னியலவுந் தருவது கொல்லோ கலிழ்கவி ரசைநடைப் பேதை மெலிந்தில ணாம்விடற் கமைந்த தூதே”1 (குறுந்-122) இது நெஞ்சொடு கிளத்தல். “நாணாக நாறு நனைகுழலா ணல்கித்தன் பூணாக நேர்வளமும் போகாது - பூணாக மென்றே னிரண்டாவ துண்டோ மடன்மாமே னின்றேன் மறுகிடையே நேர்ந்து2 (திணைமாலை-16) இது தோழிக்குக் கூறியது. இவை சாக்காடு குறித்தன. “மாவென மடலு மூர்ப பூவெனக் குவிமுகி ழெருக்கங் கண்ணியுஞ் சூடுப மறுகி னார்க்கவும் படுப பிறிது மாகுப காமங்காழ்க் கொளினே”3 (குறுந்-17) இதனுட் ‘பிறிதுமாகும்’ என்றது வரைபாய்தல்.
1. கருத்து: நெஞ்சமே! தலைவி நம் நிலை கண்டு சிறிதும் உளம் நெகிழ்ந்தாள் இல்லை. நம் குறை முடிக்க அவள்பால் செலுத்திய தூதோ (தோழியோ) என்றால் நம்மை பனைமடலாலாகிய குதிரைக்கு மணியும் மாலையும் பூட்டி யாம் எலும்பு மாலையணிந்து கொண்டு பிறர் இகழ அக்குதிரைமேல் தோன்றி ஒரு நாள் மட்டும் நாணத்தை விட்டுத் தெருவில் திரியும் படித் தூண்டுகிறது. யாம் மடலேறாது என் செய்வோம். 2. கருத்து: நாகமலர் நாறும் கூந்தலாள் என்மேல் இரங்கித் தன் அணி மார்பகத்தைத் தர நேர்ந்தாலல்லாமல் என் மார்பில் உள்ள எலும்பு மாலையணி நீங்காது. தெருவில் மனம் ஒத்து மடல் மாமேல் நின்றேன். இனி இரண்டாவதாகச் சொல்வது ஒன்றுண்டோ? இல்லை. 3. கருத்து: காமம் காழ் கொள்ளுமானால் பனைமடலைக் குதிரையாகக் கொண்டும் செலுத்துவர். மாலை என்ற பெயரில் எருக்கம்பூ மாலையைச் சூடுவர். தெருவில் நின்று பிறரால் தூற்றி ஆரவாரிக்கவும்படுவர். தம் எண்ணம் நிறைவேறவில்லையெனின் சாதலும் செய்வர். |