பக்கம் எண் :

126தொல்காப்பியம்-உரைவளம்

‘இடன்’ என்றதனால் தோழி பெரியோர்க்குத் தகாதென்ற வழித் தலைவன் மறுத்துக் கூறுவனவும் பிறவும் வேறுபட வருவனவும் கொள்க.

“நாணொடு நல்லாண்மை பண்டுடையே னின்றுடையேன்
காமுற்றா ரேறும் மடல்1      (குறள்-1133)

இனி, ‘இடனும்’ என்ற உம்மையைப் பிரித்து நிறீஇ இருநான்கு கிளவியும் மகிழ்ச்சியுங் கலங்கலுங் கூறும் இடனும் உண்டு. உரைப்பினும், பெட்பினு, முவப்பினு மிரப்பினும் வகையினுங் கூறும் இடனும் உண்டு. பகுதிக் கண்ணும் மற்றைய வழிக் கண்ணுங் கூறும் இடனும் உண்டு. மெய்யுறக் கூறலும் பீடுங்கூறலும் உண்டென முடிக்க.

சிவ.

இச் சூத்திரம் தலைவன் கூற்று நிகழும் இடங்களைத் தொகுத்துக் கூறுகின்றது. இயற்கைப் புணர்ச்சி இடந்தலைப்பாடு பாங்கற் கூட்டம் பாங்கியற் கூட்டம் எனும் நான்கு இடங்களிலும் தலைவன் வெளிப்படையாகக் கேட்போர் முன்னிலையில் கூறும் கூற்றுகள் அவை.

மெய்தொட்டுப் பயிறல்முதல் கூடுதலுறுதல் ஈறாக உள்ளன இயற்கைப் புணர்ச்சியில் நிகழ்வன. முன்னர்த் தெளிவகப்படுத்திய தலைவன் உடன் புணர்ச்சி பெறானாயின் மெய்தொட்டுப் பயிறல் முதல் கூடுதலுறுதல் இறுதியாகக் கூற்று நிகழ்த்தித் தலைவியைக் கூடுவான். இவை இயற்கைப் புணர்ச்சி முன்னர் நிகழும் கூற்றுகளாம். தெளிவகப்படுத்திய நிலையிலேயே இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்ததாயின் மெய் தொட்டுப் பயிறல் முதல் கூடுதல் உறுதல் வரையுள்ளன யாவும், இயற்கைப் புணர்ச்சி பெற்ற தலைவி உடன் பிரிய நேரும்போது அவள் உள்ளம் பிரிவுபற்றி எண்ணி அங்கேயே தடுமாறும்போது தலைவன் அஃதுணர்ந்து அவற்றால் கூற்று நிகழ்த்தித் தெளிவிப்பன். எனவே மெய்தொட்டுப் பயிறல் முதலிய ஆறும் இயற்கைப் புணர்ச்சி நிகழும் நாளிலேயே முன்னரும் பின்னருமாக நிகழ்வன எனக் கொள்ளல் வேண்டும்.


1. கருத்து: முன்னெல்லாம் நாணமும் நல்ல ஆண்மையும் உடையனாய் இருந்தேன். இன்றோ ஒருவர்பால் காமம் கொண்டார் ஏறும் மடலையுடையனானேன்.