“மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல் காதலை வாழி மதி”1  (குறள்-1118) என்பதும் அது. ஆற்றிடை உறுதலும்-தான் சேறும் ஆற்றிடை இடையூறு உண்டாய விடத்தும் கூற்று நிகழும். இரட்டுற மொழிதலான் வரைவிடை வைத்துப் பிரிந்தான் தான் சேறும் ஆற்றின் கண் வருத்தமுற்றுக் கூறலும் கொள்ளப்படும். “குருதி வேட்கை உருகெழு வயமான் வலிமிகு முன்பின் மழகளிறு பார்க்கும் மரம்பயில் சோலை மலியப் பூழியர் உருவத் துருவின் நாள்மேயல் ஆரும் மாரி எண்கின் மலைச்சுர நீளிடை நீநயந்து வருதல் எவனெனப் பலபுலந்து அழுதனை உறையும் அம்மா அரிவை பயங்கெழு பலவின் கொல்லிக் குடவரைப் பூதம் புணர்த்த புதிதியல் பாவை விரிகதிர் இளவெயில் தோன்றி அன்னநின் ஆய்நலம் உள்ளி வரினெமக்கு ஏமம் ஆகும் மலைமுதல் ஆறே” 2 (நற்றிணை-192) இந் நற்றிணைப் பாட்டு தலைவி ஆற்றினது அருமை செப்பத் தலைவன் செப்பியது.
1. கருத்து: ஏ மதியே! இப் பெண்ணின் முகம்போல ஒளிவிட ஆற்றல் உடையையானால் நீயும் ஒருவரால் காதலிக்கப்படுவாய் 2. கருத்து: புலிகள் யானைகளைக் கொல்லத் திரிந்து கொண்டிருப்பதும் பூழியர் நிலத்து ஆடுகள் மேய்வது போலக் கரடிகள் வைகறையில் மேய்ந்து கொண்டிருப்பதும் ஆகிய மலைச் சாரல் வழிகளில் நீ என்னை விரும்பி வருவது என்னை என்று அழுது தங்கும் அரிவையே! கொல்லி மலையின் மேற்குப் பகுதியில் தெய்வத்தால் புனையப்பட்ட பாவையானது இள வெயிலில் தோன்றினாற் போல ஒளிதரும் நின்மெய்யை நினைத்து வந்தால் அம்மெய்யின் ஒளியே மலைச் சாரல் வழிக்குத் துணையாகும். ஆதலின் வழியருமை கருதி வருந்தாதே. |