“ஓம்புமதி வாழியோ வாடை பாம்பின் தூங்குதோல் கடுக்குந் தூவெள் ளருவிக் கல்லுயர் நண்ணி யதுவே நெல்லி மரையினம் ஆரும் முன்றிற் புல்வேய் குரம்பை நல்லோள் ஊரே” 1 (குறுந்-235) இக் குறுந்தொகைப் பாட்டு தலைவன் வரைவிடை வைத்துச் சேறுவான் கூறியது. நச். இதுவும் இரந்து பின்னிற்புழித் தலைவன் கூற்று நிகழுமாறு கூறுகின்றது. (இ-ள்) : பண்பிற் பெயர்ப்பினும்-தோழி தலைவியது இளமை முதலிய பண்பு கூறி அவ்வேட்கையை மீட்பினும்; (உ-ம்) “குன்றக் குறவன் காதன் மடமகள் வண்டுபடு கூந்தற் றண்டழைக் கொடிச்சி வளையண் முளைவா ளெயிற்ற ளிளைய ளாயினு மாரணங் கினளே”2 (ஐங்குறு-256) இஃது இளையளெனப் பெயர்த்துழித் தலைவன் கூறியது. பரிவுற்று மெலியினும்-இருவகைக் குறியிடத்துந் தலைவியை எதிர்ப்படும் ஞான்றும் (எதிர்ப்பட்ட ஞான்றும் எதிர்ப்படா நின்ற ஞான்றும்) பலவாயவழி அவன் பரிந்த உள்ளத்தனாய் மெலியினும்,
1. கருத்து: வாடை காற்றே நெல்லிக் கனியை மான் கூட்டம் அருந்தும் முற்றத்தையுடைய சிறு வீட்டை யுடையோளது நல்ல ஊர் பாம்பின் தோல் தொங்குவது போல் கிடந்தொழுகும் அருவியையுடைய மலையிடத்ததுவாகும். 2. கருத்து: பக்கம் 128-ல் காண்க. |