நச். இது, மேற் பாங்கி நிமித்தங் கூறிய அதிகாரத்தானே பாங்கனிமித்தங் கூறுகின்றார், ‘வாயில் பெட்பினும்’ (102) என்ற பாங்கனிமித்தம் போலாது இது வேறுபடக் கூறலின் எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தது. என்னை? பாங்கன் தலைவியை எதிர்ப்பட்டு வந்து தலைவற்கு உரைத்தலன்றிக் காளையரொடு கன்னியரை உலகியலாற் புணர்க்குமாறு புணர்க்குந் துணையே யாகலின். (இ-ள்) : அகனைந்திணையும், அல்லாத வழிப் பாங்கன் கண்ணவாகிய நிமித்தம் பன்னிரு பகுதியவாம், என்றவாறு. எண்வகை மணத்தினும் இடைநின்று புணர்க்கும் பார்ப்பான் இருவகைக் கோத்திரம் முதலியனவும் தானறிந்து இடை நின்று புணர்த்தல் வன்மை அவர் புணர்தற்கு நிமித்தமாதலின் அவை அவன்கண்ணவெனப்படும். இவனைப் பிரசாபதியென்ப. நிமித்தமுங் காரணமும் ஒன்று. காரணம் பன்னிரண்டெனவே காரியமும் பன்னிரண்டாம். அவை எண் வகை மணனுமாதலின் அவற்றைக் கைக்கிளை முதலிய ஏழு திணைக்கும் இன்னவாறு உரியவென வருகின்ற சூத்திரங்களாற் பன்னிரு பகுதியும் அடங்கக் கூறுப. அவ்வாற்றானே பிரமம் பிராசாபத்தியம் ஆரிடந் தெய்வம் எனவும், முல்லை குறிஞ்சி பாலை மருதம் நெய்தல் எனவும், அசுரம் இராக்கதம் பேய் எனவும் பன்னிரண்டாம். பிரமம் முதலிய நான்கற்கும் பாங்கன் ஏதுவாகலின் இவ்வாறு பிரமசரியங் காத்தானெனவும், இவன் இன்ன கோத்திரத்தான் ஆதலின் இவட்கு உரியனெ னவும், இவளை இன்னவாற்றாற் கொடுக்கத் தகுமெனவும், இன்னோனை ஆசாரியனாகக் கொண்டு வேள்வி செய்து மற்றிக் கன்னியைக் கொடுக்கத் தகுமெனவுஞ் சொல்லிப் புணர்க்குமென்பது. இனி, யாழோர் கூட்டத்துள் ஐந்திணையுமாயிற் பாடலுட் பயின்ற வகையானே முதல் கரு உரிப்பொருள் வரையறைபற்றி முறை சிறந்து வருதலும் பெயர் கொளப் பெறாமையும் உடையவன்றே, அவ்வாறன்றி ஈண்டுக் கொள்கின்ற யாழோர் கூட்டத்து ஐந்திணையுமாயின் அவ்வந் நிலத்தியல்பானும் பிறபாடை யொழுக்கத்தானும் வேறுபட்ட வேறுபாடு பற்றியுஞ் சுட்டியொருவர்ப் பெயர் கொடுத்தும் வழங்குகின்ற உலகியலான் எல்லாரையும் இடைநின்று புணர்ப்பாருள்வழி அவ்வந் நிமித்தங்களும் வேறுவேறாகி வரும் பாங்கன் நிமித்தங்களையுடைய எனப்பட்டன. |