பக்கம் எண் :

16தொல்காப்பியம்-உரைவளம்

பைசாசமாவது: மூத்தோர் களித்தோர் துயின்றோர் புணர்ச்சியும், இழிந்தோளை மணஞ் செய்தலும், ஆடை மாறுதலும்1 பிறவுமாம்.

“எச்சார்க் கெளிய ரியைந்த காவலர்
பொச்சாப் பெய்திய பொழுதுகொ ளமையத்து
மெய்ச்சார் பெய்திய மிகுபுகழ் நண்பி
னுச்சாவார்க் குதவாக் கேண்மை
பிசாசர் பேணிய பெருமைசா லியல்பே”

“இடைமயக்கஞ் செய்யா வியல்பினி னீங்கி
யுடைமயக்கி யுட்கறுத்த லென்ப-வுடைய
துசாவார்க் குதவாத வூனிலா யாக்கைப்
பசாசத்தார் கண்ட மணப்பேறு”.

இனிக் கந்தருவமாவது: கந்தருவ குமாரருங் கன்னியருந் தம்முள் எதிர்ப்பட்டுக் கண்டு இயைந்தது போலத் தலைவனுந் தலைவியும் எதிர்ப்பட்டுப் புணர்வது.

“அதிர்ப்பில்பைம் பூணாரு மாடவருந் தம்மு
ளெதிர்ப்பட்டுக் கண்டியைத லென்ப-கதிர்ப்பொன்யாழ்
முந்திருவர் கண்ட முனிவறு தண்காட்சிக்
கந்திருவர் கண்ட கலப்பு”.

என இவற்றானுணர்க.

களவொழுக்கம் பொதுவாகலின் நான்கு வருணத்தார்க்கும் ஆயர் முதலியோர்க்கும் (21) உரித்து. மாலை சூட்டுதலும்2 இதன்பாற்படும். வில்லேற்றுதன் முதலியன பெரும்பான்மை அரசர்க்குரித்து. அவற்றுள் ஏறுதழுவுதல் ஆயர்க்கே சிறந்தது. இராக்கதம்3 அந்தணரொழிந்தோர்க்கு உரித்து. வலிதிற் பற்றிப் புணர்தலின் அரசர்க்கு இது பெருவரவிற்றன்று. பேய்4 இழிந்தோர்க்கே உரித்து. கந்தருவரின் மக்கள் சிறிது திரிபுடைமையிற் சேட்படை5 முதலியன உளவாமென்றுணர்க.


1. ஒருவன் காதலியை அவன்போல் ஆடையுடுத்திச் சென்று அவளைச் சேர்வது.

2. மாலை சூட்டுதல்-மணம் விரும்பி வந்தோர் பலருள் தான் விரும்பிய ஒருவனுக்கு மாலை சூட்டுதல்-இதனைச் சுயம்வரம் என்பர்.

3. இராக்கதம் அந்தணரில் இழிபிறப்பினர்க்கும் உரியதே.

4. பேய்-எல்லா வருணத்தும் இழிந்தோர்க்குரியது.

5. சேட்படை: புணர்ச்சிக்கு ஒருப்படாதாள் போலத் தலைவனைச் சிறிது தூரம் நீக்குதல்.