பக்கம் எண் :

களவியல் சூ. 117

அறத்தினான் பொருளாக்கி அப்பொருளான் இன்ப நுகர்தற் சிறப்பானும் அதனான் இல்லறங் கூறலானும் இன்பம் முற்கூறினார். அறனும் இன்பமும் பொருளாற் பெறப்படுதலின் அதனை இடைவைத்தார். போகமும் வீடுமென இரண்டுஞ் சிறத்தலிற் போகம் ஈண்டு கூறி வீடு பெறுதற்குக் காரணம் முற் கூறினார்.1 ஒழிந்த மணங் கைக்கிளையும் பெருந்திணையுமாய் அடங்குதலின் இதனை ‘அன்பொடு’ என்றார். பொருளாற் கொள்ளும் மணமும் இருவர் சுற்றமும் இயைந்துழித் தாமும் இயைதலிற் கந்தருவப்பாற்படும். ஐந்திணைப் புறத்தவாகிய வெட்சி முதலியவற்றிற்கும் அன்பொடு புணர்தலுங் கொள்ளப்படும்.

“அறத்திற்கே யன்பு சார்பென்ப வறியார்
மறத்திற்கு மஃதே துணை      (குறள்-76)

என்றலின்,

கந்தருவர்க்குக் கற்பின்றி அமையவும் பெறும் ஈண்டுக் கற்பின்றிக் களவே அமையா தென்றற்குத் ‘துறையமை’ என்றார்.

சிவலிங்கனார்

இச் சூத்திரம் என் நுதலிற்றோ எனின், களவு ஒழுக்கம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்) : இன்பமும் அதற்கு வேண்டிய பொருளும் அப் பொருளால் செய்யப்படும் அறமும் என்று சொல்லப்பட்ட அம் மூன்றிடத்து மேலும் அன்பொடு பொருந்திய குறிஞ்சி பாலை முல்லை மருதம் நெய்தல் என்னும் ஐந்து திணைகளுள் ஒன்றாகிய காமக் கூட்டத்தை ஆராயும்போது அது, நூலோர் நூலில் கூறப்பட்ட எண்வகை மணங்களுள் இசைத்துறையமைந்த நல்ல யாழ்ப்பாணர் காமக் கூட்டத்தின் இயல்புடையதாகும் என்றவாறு.

ஒருவனும் ஒருத்தியும் ஊழ்வயத்தால் ஓரிடத்தெதிர்ப்பட்டுப் பிறரறியாமல் காமங் காரணமாகக் கூடும் கூட்டம் காமக் கூட்டம் எனப்படும். அது பிறரறியாமல் மறைவில் கூடுதலின்


1. புறத்திணையியற் காஞ்சித் திணையிற் கூறினார்.

தொ.-2