பக்கம் எண் :

18தொல்காப்பியம்-உரைவளம்

களவுப் புணர்ச்சி எனப்படும்; ஊழ் (இயற்கை) வயத்தாற் கூடுதலின் இயற்கைப் புணர்ச்சி எனப்படும்; பின்னர் நிகழவிருக்கும் இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம், தோழியிற் கூட்டம் ஆகிய வற்றுக்கு முன்னர் நிகழ்தலின் முன்னுறு புணர்ச்சி எனப்படும்.

அன்பொடு பொருந்தி நிகழும் ஐந்திணைகளாவன குறிஞ்சி யொழுக்கமாகிய புணர்தல், பாலை ஒழுக்கமாகிய பிரிதல், முல்லையொழுக்கமாகிய ஆற்றியிருத்தல், நெய்தல் ஒழுக்கமாகிய இரங்குதல், மருதவொழுக்கமாகிய ஊடல் என்பன. அவற்றுள் புணர்தல் ஒழுக்கம் இங்கே காமக் கூட்டம் எனப்பட்டது. இவ்வைவகை யொழுக்கங்களும் களவு, கற்பு எனும் கைகோள் இரண்டிலும் நிகழ்வனவே என்றாலும் இங்கே களவில் நிகழ்வனவற்றைக் குறிக்கும். புணர்தல் குறிஞ்சியாகவும் களவில் நிகழும் வரைவிடை வைத்துப் பொருள் வயிற்பிரிதல், உடன் போக்கு, ஒருவழித் தணத்தல் என்பன பாலையாகவும், அப்பிரிவுக் காலங்களில் தலைவி ஆற்றுதல் முல்லையாகவும், இரங்குதல் நெய்தலாகவும் அமையும். ஊடல் என்பது கற்புக் காலத்துச் சிறப்பது போல் களவுக் காலத்துச் சிறவாது; என்றாலும் விரைந்து வந்து மணந்து கொள்ளவில்லையே என்ற வருத்தம் ஊடலில் அடங்கும்.

காமக் கூட்டம் என்பது யாழ்ப்பாணர் கூட்டம் போல்வதாகும்.

நூலோர் வகுத்த தமிழர் திருமணம் எட்டு. அவையாவன, அந்தணர் திருமணம், அரசர் திருமணம், வணிகர் திருமணம், வேளிர் திருமணம், கைக்கிளைத் திருமணம், பெருந்திணைத் திருமணம், ஏறுதழுவல் திருமணம், யாழோர்த் திருமணம் என்பன. முதல் நான்கு திருமணங்களும் குலமுறைத் திருமணங்களாம். கொடுத்தற்குரியவர் கொடுப்பக் கொள்ளும் மணங்கள் அவை. அவரவர் குலத்தளவில் அமைவன. பின்னர் உள்ள மூன்றும் அவரவர் குலத்தளவிலும் வேற்றுக் குலத்தளவிலும் நிகழ்வன. யாழோர் திருமணம் என்பது பாணர் திருமணம்.

அவற்றுள் கைக்கிளைத் திருமணமாவது ஒருவன் ஒருத்தியைக் கண்டு விரும்பி அவள் விருப்பம் அறியுமுன்னே அவனைத் தக்கார் மூலம் மணந்து கொள்வது. காமம் சாலா இளையாளை விரும்பி மணப்பதும் கைக்கிளையாம்.

ஒருவன் தன்னின் வயதில் மூத்தாளை மணப்பதும், தான் விரும்பியவளையடைய இயலாதுவிடின், மடலேறுதல், தன்