காமத்தைப் பிறர்க்குப் புலப்படச் செய்தல் முதலியவற்றால் ஊர்ப் பெருமக்கள் துணையால் மணப்பதும் பெருந்திணை மணமாம். ஏறுதழுவல் முதலிய வீரங் காட்டி அதன் பரிசாக ஒருத்தியை மணப்பது ஏறுதழுவல் திருமணமாம். இதில் வில்லேற்றுதல், திரிபன்றியெய்தல் முதலிய வீரச் செயல்களும் அடங்கும். யாழோர் கூட்டம் என்னும் திருமணமாவது, வெவ்வேறு திசைகளிலிருந்து வரும் யாழோர் (யாழ்ப்பாணர்) ஒரு பொழிலகத்துத் தங்க, அவருள் ஒரு கூட்டத்தாருள் ஓர் இளைஞனும், பிறிதோர் கூட்டத்து ஓர் இளையளும் தனித்து எதிர்ப்பட்டுத் தம் உடம்பால் கூடிப் பின்னர் பெற்றோர் முறையாக மணந்து கொடுப்ப மணப்பது. யாழோர் தம் புரவலரை நாடி ஊர் ஊராய்ச் செல்பவராதலின் அவர்தம் திருமணம் அப்படி நடைபெறுவது வழக்கமாயிற்று. அவர் போலப் பறையர் கடம்பர் துடியர் மணமும் அமையும். மேற்கூறிய எண்வகைத் திருமணங்களோடு களவு மணம் என்பதொன்றும் நூலோரால் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகும். அக்களவு மணம் யாழோர் மணம் போல்வதாதலின் அதிலேயே அடக்கினர். அதனால் களவு மணம் யாழோர் கூட்டம் எனவும் படும். யாழோர் கூட்டம் யாழோரிடையே நடைபெறுவது. களவு மணம் ஒத்த குலத்தாரிடையோ வேற்று குலத்தாரிடையோ நடைபெறுவது. அந்தணர் திருமணம் முதல் யாழோர் திருமணம் வரையுள்ள எட்டு திருமணங்களும் முறைப்படி நடப்பனவாதலின் மணந்த பின் நடைபெறும் ஒழுக்கம் கற்பொழுக்கம் எனப்பட்டு யாவராலும் ஏற்றுக் கொள்ளப்படும் இவற்றுக்கு மாறாக அமைவது களவு மணம். முன்பின் அறியாத ஒருவனும் ஒருத்தியும் ஊழ்வயத்தால் ஒரு பொழிலகத்து எதிர்ப்பட்டுக் கண்டு மனம் நெகிழ்ந்து அன்புடையராய் ஒருவரையொருவர் இன்றியமையாதவராய்க் காம மிகுதியால் அங்கேயே கூடிப் பிரிந்து, மீண்டும் இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம், தோழியிற் கூட்டம் எனப் பல காலம் புணர்ந்து ஒருவழித் தணத்தல், வரைவிடை வைத்துப் பொருள் வயிற்பிரிதல், உடன்போக்கு முதலிய நிகழ்த்தி ஊரலர் முதலிய ஏற்று இறுதியில் மணஞ் செய்து கொள்ளுந்துணையும் நடந்து வரும் ஒழுக்கம், பிறர் அறியாக் களவொழுக்கம் ஆகும். இக்களவொழுக்கம் முடிவு திருமணம் ஆதலின் அது களவு மணம் எனப் |