பக்கம் எண் :

களவியல் சூ. 17163

அசையின ளிருந்த ஆய்தொடிக் குறுமகள்
நலஞ்சால் விழுப்பொருள் கலநிறை கொடுப்பினும்
பெறலருங் குரைய ளாயின் அறந்தெரிந்து
நாமுறை தேஎ மரூஉப்பெயர்ந் தவனொடு
இருநீர்ச் சேர்ப்பி னுப்புடன் உழுதும்
பெருநீர்க் குட்டம் புணையொடு புக்கும்
படுத்தனம் பணிந்தனம் அடுத்தனம் இருப்பில்
தருகுவன் கொல்லோ தானே விரிதிரைக்
கண்திரள் முத்தங் கொண்டு ஞாங்கர்த்
தேன்இமிர் அகன்கரைப் பகுக்குங்
கானலம் பெருந்துறைப் பரதவன் நமக்கே”1      (அகம்-280)

எனவரும்.

‘கிழவோன்மேன என்மனார் புலவர்’ என்பது-இச்சொல்லப் பட்டனவெல்லாம் கிழவோன் இடத்தன என்றவாறு.

கூற்றென்னாது பொதுப்படக் கூறுதலான் உள்ள நிகழ்ச்சியும் கூற்றும் கொள்ளப்படும்.

நச்.

இது, மேற்றலைவற்குரிய கிளவி கூறிப் பாங்கனிமித்தம் அவன் கண் நிகழும் பகுதியுங்கூறி அம்முறையானே தலைவிக்குரிய கிளவி கூறுகின்றது.

(இ-ள்) : இருவகைக் குறி பிழைப்பு ஆகிய இடத்தும்-இரவுக் குறியும் பகற் குறியும் பிழைத்தவிடத்தும்.


1. கருத்து: ஆய்தொடிக் குறுமகளைக் கலம் நிறை விழுப்பொருள் கொடுப்பினும் பெறுதற்கு அரியவள். நாம் நம்மூரை விட்டு அவளூர் சென்று அவள் தந்தையைச் சார்ந்து உப்புப் பொதியுடன் திரிந்தும் கடலில் அவனுடன் தோணியிற் சென்றும் அவன் வயமாகியும் அவனைப் பணிந்தும் சார்ந்தும் இருப்பின் அவனே அறம் நோக்கியுணர்ந்து அவளைத் தருவானோ. இது தலைவன் தலைவியைப் பெறலரிது என்று உணர்ந்து கூறியது. விழுப் பொருள் கொடுப்பினும் பெறல் அரியள் என்பதால் அவள் தந்தை மறுப்பன் எனும் உணர்வு தலைவனிடம் இருத்தல் காணலாம்.