புரைதீர் கிளவி-தலைவனுயர்பிற்கு ஏலாது இயற்பழித்து உரைக்குங் கிளவி. அது, “பாடுகம்வா வாழி தோழி” என்னுங் குறிஞ்சிக் (41) கலியுள், “இலங்கு மருவித் திலங்கு மருவித்து வானி னிலங்கு மருவித்தே தானுற்ற சூள்பேணான் பொய்த்தான் மலை”. (கலி-41) எனத் தோழி இயற்பழித்தவாய்பாட்டான் வரைவு கடாவ அதனை உடம்பட்டுப் பழித்தற்கு உடம்படாதாள். “பொய்த்தற் குரியனோ பொய்த்தற் குரியனோ வஞ்சலோம் பென்றாரைப் பொய்த்தற் குரியனோ குன்றக னன்னாடன் வாய்மையிற் பொய்தோன்றிற் றிங்களுள் தீத்தோன்றி யற்று” 2 (கலி-41) எனத் தலைவி இயற்பட மொழிந்து எதிர் மறுத்தவாறு காண்க. “அருவி வேங்கைப் பெருவரை நாடற் கியானெவன் செய்கோ வென்றியா னது நகையென வுணரே னாயி னென்னா குவைகொ னன்னுத னீயே” 3 (குறுந்-96) இதுவும் இயற் பழித்த தோழிக்குத் தலைவி இயற்பட மொழிந்தது.
1. தான் சொன்ன சூளுறவைப் பொய்த்தவன் மலையாய் இருந்தும் அது விளங்கும் அருவியினை யுடைத்தாய் இரா நின்றது. 2. தானுற்ற சூளைப் பொய்த்தற்குரியனோ. பிரியேன் என்று அஞ்சுதலை விடுக என்று கூறித் தெளிவிக்கப்பட்டவரைப் பொய்த்தற்கு உரியனோ. அப்படி வாய்மையில் பொய் தோன்றுமாயின் அது திங்களில் தீத்தோன்றியது போலாகும். 3. நல்ல நுதலையுடைய தோழியே! நீ தலைவன் (நாடன்) நல்லது செய்யாததற்கு யான் என் செய்வேன் என்று கூறினாய். அக் கூற்றை நீ நகையாகக் கூறினாய் என்று நான் கொள்ளாக்கால் நீ என்ன ஆவாய் தெரியுமா? |