வேட்கை நிகழாமையின். வேட்கையுள்வழி நாணும் மடனும் நீங்காவோ எனின், அது வருகின்ற சூத்திரத்தாற் கூறுப. இதனாற் சொல்லியது தலைவி தலைவனை எதிர்ப்பட்டு முன்னிலையாக்கல் முதலாகத் தலைவன் மாட்டு நிகழ்ந்தமை போலத் தலைவி மாட்டு நிகழ்பவை உளவோவெனின், அவள் மாட்டுக் குறிப்பினானாதல், சொல்லுதற்குத் தக்க விடத்தினானாதல், தோற்றுவதல்லது, புலப்பட்டு நிகழாதென்றவாறாயிற்று. “உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல் கண்டார் மகிழ்செய்தல் இன்று”. (குறள்-1090) என்றது தலைவனைக் கண்ட தலைவி வேட்கைக் குறிப்பினால் தன்னுள்ளே கருதியது. இடம் பற்றி வேட்கை தோற்றியதற்குச் செய்யுள். “.......................................................................................... நெடுங்கொடி நுடங்கும் நாவாய் தோன்றுவ காணா மோவெனக் காலிற் சிதையா நில்லாது பெயர்ந்த பல்லோ ருள்ளும் என்னே குறித்த நோக்கமொடு நன்னுதால் ஒழிகோ யானென அழிதகக் கூறி யான்பெயர்க என்ன நோக்கித் தான்தன் நெடுந்தேர்க் கொடிஞ்சி பற்றி நின்றோன் போலும் இன்றும்என் கட்கே” 1 (அகம்-110) எனத் தன் குறிப்புக் காலத்தாற் கூறுதலாற்றாது பின் இடம் பெற்றுழிக் கூறியவாறு காண்க.
1. கருத்து: கடலில் கொடியசையும் கப்பல் வரும் தோற்றத்தைக் காண்போம் என்று சொல்லிக் காலாற் சிற்றிலைச் சிதைத்துப்போன தோழியர் பலருள் என்னொருத்தியை மட்டும் குறித்த பார்வையோடு, நன்னுதலாய்! நான் போகவா எனக் கேட்டு நான் போக எனச் சொல்ல என்னையே பார்த்துத் தன் நெடிய தேரைப் பற்றி நின்றான் அவன். அக்காட்சி இன்னும் என் கண்ணிடத்ததாகும். |