பக்கம் எண் :

களவியல் சூ. 18181

நச்.

இஃது உள்ளப்புணர்ச்சிக்கு உரியவாறு மெய்யுறுபுணர்ச்சிக் கண்ணும் நிகழுமென்ற நாணும் மடனுங் குறிப்பினும் இடத்தினும் வருமெனக் கூறுதலின் ‘அச்சமு நாணும்’, (99) என்பதற்குப் புறநடையாயிற்று. இதனை ஈண்டுக் கூறினான், இடத்தின் கண்வரும் நாணும், மடனுந் தந்தன்மை திரிந்து வருமென்பதூஉம், அது கூற்றின்கண் வருமென்பதூஉங் கூற்று நிகழ்கின்ற இவ்விடத்தே கூறவேண்டுதலின். எனவே, இது முதலிய சூத்திரம் மூன்றும் முன்னர்த் தலைவிக்குக் கூற்று நிகழுமென்றற்குக் கூற்று நிகழுங்கால் நாணும் மடனும் நீங்கக் கூறும் என்று அக்கூற்றிற்கு இலக்கணங் கூறினவேயாயிற்று.

(இ-ள்) : அவள் வயின் ஆன நாணும் மடனும் பெண்மைய ஆதலின்-தலைவியிடத்து உளவாகிய நாணும் மடனும் பெண்மைப் பருவத்தே தோன்றுதலையுடையவாதலின், காமத்திணையிற் கண்ணின்று குறிப்பினும் வரூஉம்-அப் பருவத்தே தோன்றிய காமவொழுக்கங் காரணமாக அவை கண்ணின் கணின்று குறிப்பினும் வரும். வேட்கை நெறிப்பட இடத்தினும் வரூஉம் - அன்றி வேட்கை தன்றன்மை திரியாது வழிப்படுதலாலே கரும நிகழ்ச்சிக்கண்ணும் வரும்; அல்லது வாரா-அவ்வீரிடத்துமல்லது அவை வாரா என்றவாறு.

இயற்கைப் புணர்ச்சிக்கண் உரியவாகக் கூறும் பன்னிரண்டு மெய்ப்பாட்டானுங் குறிப்பின்கண் நாணும் மடனும் நிகழ்ந்தவாறுணர்க.

“ஒருநெறிப் பட்டாங் கோரியன் முடியுங்
கருமநிகழ்ச்சி யிடமென மொழிப”

என்னுஞ் செய்யுளியற் (510) சூத்திரத்தான் இடமென்றதனைக் கருமநிகழ்ச்சி என்றுணர்க.

அஃதாவது இடந்தலைப்பாடும் பாங்கொடுதழாஅலும் தோழியிற்புணர்வுமாம். இவற்றின் கண்ணும் நாணும் மடனும் நிகழுமென்றான். இனித் தோழியிற் புணர்வின்கண் வரும் நாணும் மடனுந் தந்தன்மை திரிந்து வருமென மேலிற் சூத்திரத்தாற் கூறுகின்றான்.