கெட்டு அக்கூற்று நிகழுமென்பதூஉம் அங்ஙனங் கெடுதலையும் முந்து நூற்கண் ஆசிரியர் நாட்டுதல் உளவென்பதூஉங் கூறியவாறாயிற்று. “தேரே முற்றன்று நின்னினும் பெரிதே” (கலி-74) “பேரேமுற் றாய்போல முன்னின்று விலக்குவாய்” (கலி-113) என்றாற்போல மயக்கம் உணர்த்திற்று, இனி நாணும் மடனுங் கெட்டகூற்றுத் தோழியை நோக்கிக் கூறுமென மேற் கூறுகின்றான். வெள். இது காதலர் இருவர் தம்முள் எதிர்ப்பட்டுக் காணும் காட்சியில் தலைமகளது உள்ளத்தே தோன்றும் வேட்கை தனித்து மீதூர்ந்து வெளிப்படாது நாணொடும் மடனொடும் பிரிவின்றித் தோன்றுதற்குரிய காரணம் கூறுகின்றது. (இ-ள்) : உள்ளத் தெழுந்த வேட்கையை வெளிப்படுத்தாத காதலர் கண்கள் உலகத்தில் இல்லாமையால் (ஒத்த காதலர் இருவரிடையே நிகழ்தற்குரிய களவொழுக்கமாகிய இவ்வொழுகலாறு) ஏமம் (பாதுகாவல்) உடையதாதற் பொருட்டு முன் குறித்த நாணமும் மடனுமாகிய பெண்மைக் குணங்கள் இரண்டும் தலைமகள் பால் நீங்காது உள்ளனவாம் என்று கூறுவர் சான்றோர், (எ-று) சொல்லுதல்-வெளிப்படுத்தல். நாட்டம்-கண். ஏமம் ஏம் என மருவியது. ஏமம்-பாதுகாவல். உற-உறுதற் பொருட்டு. இரண்டும்-முன்னைய சூத்திரத்திற் கூறப்பட்ட நாணமும் மடனும். மகளிர்பால் என்றும் நீங்காது உளவாதற்குரிய அச்சம் நாணம் மடன் என்னும் மூன்றனுள் முதற்கண்ணதாகிய அச்சம் வேட்கை காரணமாக நீங்கினும் நாணம் மடன் என்னும் இரண்டும் தலைமகள்பால் எக்காலத்தும் நீங்காது உளவாம் என்பது கருத்து. |