‘சூத்திரத்துட் பொருளன்றியும்......படுமே’ (658) என்பதனான் இவ்விலக்கணம் பெறுதற்கு இம் மூன்று சூத்திரத்திற்கும் மாட்டுறுப்புப்படப் பொருள் கூறினாம். இனிக் கூற்று நிகழுங்கால் நாணும் மடனும் பெண்மையவாதலிற் குறிப்பினும் இடத்தினுமன்றி வேட்கை நெறிப்பட வாராவென்று பொருள் கூறிற் ‘காட்டிய உதாரணங்கட்கு மாறுபாடாகலானுஞ் சான்றோர் செய்யுட்களெல்லாங் குறிப்பும் இடனுமன்றிப் பெரும்பான்மை கூற்றாய் வருதலானும் ஆசிரியர் தலைவன் கூற்றுந் தலைவி கூற்றுந் தோழி கூற்றுஞ் செவிலி கூற்றுமெனக் கூற்றுஞ் சேர்த்து நூல் செய்தலானும் அது பொருளன்மையுணர்க. வெள். இத் தலைமகன் தன் வேட்கையைக் குறிப்பினாலன்றிக் கூற்றினாற் புலப்படுத்துதல் இல்லை என்கின்றது. (இ-ள்) : இயற்கைப் புணர்ச்சிக் கண் தலைவன் தன்னை நோக்கி வினவும் வினாவுக்குத் தலைவி வெளிப்பட மறுமொழி கூறுதல் என்பது அவளது பெண் தன்மைக்கு மிகவும் அருமையுடையதாதலின் கூற்று மொழியல்லாத குறிப்பு மொழிகளே அவள்பால் தோன்றும், எ-று, ‘அல்ல கூற்று மொழி’ என்றது கூற்று மொழியல்லாத குறிப்பு மொழிகளை. தாமுறு காமத்தன்மை தாங்களே உரைப்பதென்பது ஆமென லாவதன்றால் அருங்குல மகளிர்க்கம்மா (கம்ப. சூர்ப்ப. 45) என்பதும் இங்கு நினைக்கத் தகுவதாம். களவின்கண் தலைவன் வினாவும் சொல்லிற்குத் தலைவி எதிர்மொழி கூறுதல் என்பது மிகவும் அரிதாகலின் அந்நிலையில் கூற்றல்லாத குறிப்பு மொழிகளே அவள்பால் தோன்றும் என்பதாம். ‘அல்ல கூற்று மொழி’ என்றது கூற்று மொழியல்லாத குறிப்பு மொழியினை. சிவ. காமத் திணையின், காமம் சொல்லா, சொல்லெதிர் என்னும் மூன்று சூத்திரங்களும் தலைவியின் நாணும் மடனும் |