பக்கம் எண் :

188தொல்காப்பியம்-உரைவளம்

பற்றியன என்பதில் இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் ஒத்த கருத்தினரே, என்றாலும் சூத்திரங்களுக்குப் பொருள் கொண்ட வகையில் மாறுபடுகின்றனர்.

1. தலைவி நாண் மடம் அச்சம் இயல்பாகவுடையவள். அதனால் இயற்கைப் புணர்ச்சியின் முதற் காட்சியில் தலைவன் பால் சென்ற வேட்கை காரணமாக அவட்குக் கூற்று நிகழுமோ எனின் நிகழாது. எனினும் தன் கண்ணின் குறிப்பால் தன் வேட்கையைப் புலப்படுத்துவாள். சொல்லால் புலப்படுத்த மாட்டாள். பிறிதொரு காலத்தில் அவ் வேட்கையைப் பற்றித் தக்க இடம் வாய்ப்பின் புலப்படுத்துவாள்.

2. உலகில் காமக்குறிப்பை யுணர்த்தாத கண் இல்லை’ அதனால் தலைவியின் கண் இரண்டும் தன் வேட்கைக் குறிப்பினைத் தலைவனுக்கு உணர்த்தும். அப்போது அவளுக்கு இயல்பாக அச்சம் நீங்கும். அச்சம் இருந்தால் வேட்கை நிகழாது. அதனால் வேட்கை நிகழவே அச்சம் நீங்கி விடும். ஆனால் நாணும் மடனும் நீங்கா. ஏன்எனின் நாண் மடம் நீங்கியவளைத் தலைவன் மதியான்; விரும்பான். அதனால் நாணும் மடனும் வேட்கையைப் புலப்படுத்தும்போது நீங்காது தலைவன் வேட்கைக்கு ஏமமாக அமையும். அதாவது தலைவன் அன்பு சிறப்பதற்கு உரியவாக அமையும்.

3. இயற்கைப் புணர்ச்சியின் முதற் காட்சியில் தலைவன் தன் வேட்கையினைப் புலப்படுத்திப் பேசும் பேச்சின் எதிரே உடம்பட்டவளாகத் தன் வேட்கையைக் .கூற்றால் கூறுதல் இயலாது ஆதலின் உடன்படாதவள் போலக் கூறுதல் உண்டு.

இளம்பூரணர் இவ்வாறு மூன்று சூத்திரங்களுக்கும் உரை கூறினர். இனி நச்சினார்க்கினியர் கூறியது வருமாறு:

1. நாணமும் மடனும் பெண் தன்மையன ஆதலின் அவை இயற்கைப் புணர்ச்சியில் தலைவிக்குக் கூற்று நிகழுமிடத்துக் காமவொழுக்கம் காரணமாகக் கண்ணில் பொருந்திக் குறிப்பாக வெளிப்படும்.

2. அந் நாணமும் மடனும் இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம், பாங்கியிற் கூட்டங்களாகிய கருமநிகழ்ச்சி யிடங்களில், கூற்று நிகழாத செய்யுள் வழக்கு-புலனெறி வழக்கு இல்லாமையால் அவ்வழக்கில் அதாவது அச் செய்யுளில் அந்நாணமும் மடனும் தம் தன்மை திரிந்து வரப் பாடப்படுதல் உண்டு. நாணமும் மடனும் தம் தன்மை திரிதலாவது கெடுதல்.