பக்கம் எண் :

களவியல் சூ. 21189

3. நாணமும் மடனும் நீங்கிய கூற்றைத் தோழியிடம் கூறுதல் அருமையன்று ஆதலின் கூற்றாற் கூறுதல் தலைவிக்குப் பொருந்தும்.

இளம்பூரணர் உரை நாணமும் மடனும் எவ்விடத்தும் தலை விக்கு நீங்காது நிற்கும் என்பதை யுணர்த்த, நச்சினார்க்கினியர் உரை தலைவி தன் வேட்கையைக் குறிப்பாற் கூறும் இடத்தில் நீங்காதிருப்பினும் இடந்தலைப்பாடு முதலிய இடங்களில் அவை நீங்கும் என்பதை யுணர்த்துகிறது.

தலைவி கூற்று நிகழ்த்த வேண்டின் நாணமும் மடனும் என்னவாகும் என்பது கூறப்பட வேண்டுவதாம்.

இயற்கைப் புணர்ச்சியின் முதற் காட்சியில் தலைவிக்குத் தலைவன்பால் வேட்கை மீதூர்தலின் அதனைக் கண்ணாற் குறிப்பாகவே புலப்படுத்தச் செய்யும் நாணும் மடனும். இடந் தலைப்பாடு முதலிய இடங்களிலும் அவை தலைவியிடம் அமைந்து கிடக்கும் என்பது முதற் சூத்திரப் பொருளாம். அவ்வாறு அமைந்து கிடப்பது ஏன்? வேட்கை தோன்றியவுடன் அச்சம் நீங்குவதுபோல அவையும் நீங்க வேண்டாவோ எனின் அவை நீங்கின் தலைவன் தலைவியைக் குறைவாக எண்ணும். அதனால் அவை அவளிடம் நீங்காமலே பொருந்தியிருக்கும் என்பது இரண்டாம் சூத்திர உரை.

தலைவி தன் வேட்கையைத் தலைவனுக்குப் புலப்படுத்துவ தாயின் அவன் சொல்லுக்கு நேராகத்தான் சொல்லால் புலப்படுத்துதல் அருமையுடைத்து (முடியாது) ஆதலின் குறிப்பாகவே புலப்படுத்தும் என்பது மூன்றாம் சூத்திரவுரை.

எனவே இச் சூத்திரம் மூன்றும் இயற்கைப் புணர்ச்சியை நோக்கிக் கூறப்பட்டனவே என்னலாம். நாணமும் மடனும் தம் தன்மை திரிந்து (நீங்கி) வரும் என நச்சினார்க்கினியர் கூறுவது அத்துணைச் சிறப்பின்று.

மேலும் தலைவி கூற்று

109.மறைந்துஅவற் காண்டல் தற்காட் டுறுதல
  நிறைந்த காதலிற் சொல்எதிர் மழுங்கல்
வழிபாடு மறுத்தல் மறுத்துஎதிர் கோடல்