அல்லல் களைந்தனன் தோழி நந்நகர் அருங்கடி நீவாமை கூறி னன்றென நின்னொடு சூழ்வல் தோழி நயம்புரிந் தின்னது செய்தாள் இவளென மன்னா உலகத்து மன்னுவது புரைமே.” 1 (கலித்-54) இதனுட் கைப்பட்டுக் கலங்கியவாறும் அருமறை உயிர்த்தவாறும் இவ்வாறு செய்யாக்கால் இறந்துபடுவன் என்னுங் குறிப்பினளாய் ‘மன்னா வுலகத்து மன்னுவது புரையும்’ எனவுங் கூறியவாறு காண்க. நாணுமிக வந்ததற்குச் செய்யுள்: “நோக்குங்கால் நோக்கித் தொழூஉம்பிறர் காண்பார் தூக்கிலி தூற்றும் பழியெனக் கைகவித்துப் போக்குங்காற் போக்கும் நினைந்திருக்கும் மற்றுநாம் காக்கும் இடமன் றினி”2 (கலித்-63) இது நாணம் மிக்கவழித் தோழியொடு உசாவியது.
1. கருத்து: தோழீ! நரந்தப்பூ நாறும் கூந்தல் முழுதும் பற்றிப் பிடித்து அதில் புனைந்த ஒரு மலர்க் கொத்து மாலையைத் தன் விரலிற் சுற்றி மோந்து பார்க்கவும் செய்தான். நறவ மலர் விரிந்தது போன்ற என் மென் விரல்களைக் கொண்டு தன் செங்கண் மறைய வைத்துக் கொல்லன் உலைமூக்குப்போல உயிர்த்தலும் உயிர்ப்பன். என் தொய்யில் எழுதிய இளமுலைகளைத் தடவி பிடியை மயக்கும் காம மயக்கம் உடைய களிறு போல என்னை மயக்கவும் மயக்குவான். அதனால், என் துயர் நீக்கினேன். தோழீ! அவனொடு அரிய மணத்தை நீக்காமல் வேண்டி நின்னோடு சூழ்வேன். அப்படிச் செய்வாயாயின் தாயிடம் அறத்தொடு நின்று இப்படிப்பட்ட ஒரு மணத்தை நிகழச் செய்தாள் இத் தோழி எனும் வார்த்தை நில்லாவுலகத்து நிலை பெறும். 2. கருத்து: நாம் பார்க்குங்கால் நம்மைப் பார்த்துத் தொழும். பிறர் காணுவரே என்று ஆய்தல் இல்லாத அவன் அப்படித் தொழுவதால் பிறரால் பழிதூற்றுவன் என எண்ணிப் போகச் செய்தால் போக வருந்திப் போகாமல் இருக்கும். எனவே இனி நாம் அவனை வாராதே எனத் தடுக்கும் இடம் இல்லை. |