இட்டுப் பிரிவிரங்கியதற்குச் செய்யுள்: “அம்ம வாழி தோழி காதலர் பாவை யன்னஎன் ஆய்கவின் தொலைய நல்மா மேனி பசப்பச் செல்வேம் என்பதம் மலைகெழு நாட்டே” 1 (ஐங்குறு-221) எனவரும். அருமை செய்தயர்த்தற்குச் செய்யுள்? “நெய்தற் புறவின் நிறைகழித் தண்சேர்ப்பன் கைதைசூழ் கானலுட் கண்டநாட் போலானாற் செய்த குறிவழியும் பொய்யாயின் ஆயிழாய் ஐயகொல் ஆன்றார் தொடர்பு”2 (திணை மொழி-41) எனவரும். வந்தவழி யெள்ளியதற்குச் செய்யுள்: கண்திரள் முத்தம் மயக்கும் இருண்முந்நீர்ப் பண்டங்கொள் நாவாய் வழங்குந் துறைவனை முண்டகக் கானலுட் கண்டேன் எனத்தெளிந்தேன் நின்ற உணர்விலா தேன்”3 (ஐந்திணையெழு-56)
1. கருத்து: தோழி வாழி நம் காதலர் பாவையின் அழகு போலும் என் அழகு அழியவும் நல்ல மேனி பசலையடையவும் நம்மைப் பிரிந்து தம் மலை நாடு நோக்கிச் செல்வேன் என்பர். 2. கருத்து: ஆயிழையாய்! நெய்தற் பூக்கள் நிறைந்த படப்பையில், நிறைந்த கால்வாய்களையுடைய தாழைக் கானலுள் சேர்ப்பனை முதல் நாளில் கண்டதுபோல இன்று காணப்பட்டான். அதாவது அரியன் ஆனான், அவன் செய்த குறியிடங்களும் பொய்த்தன. அதனால் ஆன்றமைந்த அவர் தொடர்பு ஐயந்தானோ? 3. கருத்து: கண்போல் திரண்ட முத்துகளைப் பயக்கும் கடலில் பண்டங்களாகக் கொள்ளும் நாவாய்கள் வழங்கும் துறைவனைக் கானலிடத்துக் கண்டது போலத் தெளிவடைந்தேன். இதற்கு முன் இருந்த உணர்வு இப்போது இல்லாத யான். |