இறையனார் களவியல். 1 அன்பின் ஐந்திணைக் களவெனப் படுவது அந்தணர் அருமறை மன்றல் எட்டினுள் கந்தருவ வழக்கம் என்மனார் புலவர். நம்பி அகப்பொருள் 117 உளமலி காதற் களவெனப் படுவது ஒருநான்கு வேதத்து இருநான்கு மன்றலுள் யாழோர் கூட்டத்து இயல்பினது என்ப. தமிழ் நெறி விளக்கம் 14 முந்திய நூலோர் மொழிந்த எண் மணத்தினும் கந்தருவ முறைமை களவெனப் படுமே. முத்து வீரியம் 830 அவற்றுள் களவந் தணர்மறை மன்றல் எட்டனுள் யாழோர் இயல்பின தாகும். இளம்பூரணர் இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின், களவியல் என்னும் பெயர்த்து; களவொழுக்கம் உணர்த்தினமையாற் பெற்ற பெயர். அஃதாதல் ஈண்டு1 உரைக்கின்றதனால் பயன் இன்றாம்; களவென்பது அறம் அன்மையின் [எனில்], அற்றன்று; களவு எனும் சொற் கண்டுழியெல்லாம் அறப்பாற் படாதென்றல் அமையாது. களவாவது, பிறர்க்குரியபொருள் மறையிற் கோடல், இன்னதன்றி, ஒத்தார்க்கும் மிக்கார்க்கும் பொதுவாகிய கன்னியரைத் தமர் கொடுப்பக் கொள்ளாது, கன்னியர் தம் இச்சையினால் தமரை மறைத்துப் புணர்ந்து பின்னும் அறநிலை வழாமல் நிற்றலால் இஃது அறமெனப்படும். அன்னதாதல் இச்சூத்திரத்தானும் விளங்கும். அஃதற்றாக, மேலை ஓத்தினோடு இவ் வோத்திற்கு இயைபு என்னையெனின், மேல் கைக்கிளை முதற் பெருந்திணை இறுவாயாக எழுதிணை ஓதி அவற்றின் புறத்து நிகழுந்திணைகளும்2
1. ஈண்டு- அறவொழுக்கங்கூறும் இவ்வதிகாரத்தில். 2. வெட்சி முதலிய ஏழு திணைகள். |