ஓதிப் போந்தார். அவ்வெழு திணையினும் ஒருதலை வேட்கையாகிய கைக்கிளையும், ஒப்பில் கூட்டமாகிய பெருந்திணையும் ஒழித்து இருவரன்பும் ஒத்த நிலைமையாகிய நடுவண் ஐந்திணைக் கண்ணும் புணர்ப்பும் பிரிதலும் இருத்தலும் இரங்கலும் ஊடலுமாகிய உரிப்பொருள் களவு, கற்பு என்னும் இருவகைக் கைகோளினும் நிகழுமாதலின் அவ்விருவகைக் கைகோளினுங் களவாகிய கைகோள் இவ்வோத்தினுள் உணர்த்துதலான் அவற்றின் பின் கூறப்பட்டது. இது நடுவணைந்திணைக் கண் நிகழும் பொருட் பாகுபாடாயின், அகத்திணையியலின் பின் வைக்கற்பாலது எனின், ஆண்டு வைக்கக் கருதின் “வெட்சி தானே குறிஞ்சியது புறனே” (புறத்திணை-1) என்னு மாட்டேறு பெறாதாம். அதனிடைக் களவியலும் கற்பியலும் கிடத்தலான் என்க. மற்றும், அஃது யாங்ஙனம் உணர்த்தினாரோ எனின், “காமப் புணர்ச்சியும் இடந்தலைப் படலும் பாங்கொடு தழாஅலுந் தோழியிற் புணர்வுமென்று ஆங்கநால் வகையினும் அடைந்த சார்வொடு மறையென மொழிதன் மறையோர் ஆறே” (செய்யுளியல்-178) என்பதனான் இந்நால் வகையும் இதனுள் உரைக்கப்படுகின்றதென்று கொள்ளப்படும். காமப் புணர்ச்சியெனினும், இயற்கைப் புணர்ச்சியெனினும், முன்னுறு புணர்ச்சியெனினும், தெய்வப் புணர்ச்சியெனினும் ஒக்கும். இவையெல்லாம் காரணப் பெயர். அஃதாவது1, ஒத்தார் இருவர் தாமே கூடுங்கூட்டம். இடந்தலைப் பாடாவது, இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் பிற்றை ஞான்றும் அவ்விடத்துச் சென்று எதிர்ப்படுதல், பாங்கற் கூட்டமாவது, இப்புணர்ச்சி பாங்கற்கு உரைத்து, நீ யெமக்குத் துணையாக வேண்டுமென்ற அவன் குறிவழிச்2 சென்று தலைமகள் நின்ற நிலையை யுணர்த்தச் சென்று3 கூடுதல் தோழியிற் கூட்டமாவது, இவற்றின் பின்னர் இக்கூட்டம் நீடச்சேறல் வேண்டித் தோழியை இரந்து பின்னின்று அவள் வாயிலாகக் கூடுதல், இவை நான்கும் இம்முறையே நிகழும்
1. காமப்புணர்ச்சியாவது 2. அவன் குறிவழி-தலைவன் குறித்த இடம் 3. தலைவன் சென்று |