பட்டனவாம். அதனால் களவு மணம், ஆரியர் கூறும் கந்தருவ மணத்தோடு ஒக்கும் என்பது பொருந்தாது. பிரமமணத்திற் கூறப்படும் வயது அளவு தமிழர்க்கு ஏற்றதன்று எண் வகைத் தமிழ் மணங்களுள் கைக்கிளை, பெருந்திணை, ஏறுதழுவல், களவு மணம் ஆகிய நான்கற்கும் இலக்கியங்கள் உள. அந்தணர் மணம் முதலிய நான்கற்கும் இலக்கியங்கள் காண்டல் அரிது. ஆனால் அந்நான்கும் குலமுறை மணமாதலின் குலமுறை மணம் உண்டு என்பதற்குத் தொல்காப்பியத்திலும் பிறவற்றிலும் குறிப்புகள் உண்டு. களவொழுக்கத்தில் தலைவன் தோழியை இரந்து குறையுறும் போது அவள், ‘உலகியல்படி நீ நின் தமரைக் கொண்டு மணம் பேசி வந்து மணந்து கொள்க’ எனக் கூறுவதும் (களவியல் 23) வேற்றுவரைவுவரின் அது மாற்றுதற்காகத் தோழியிடம் தலைவி அறத்தொடு நிற்பதும் (கள.20) ஆகிய செய்திகள் ஒத்த குலத்தினர் மகட் பேசிவரும் செய்தியையே குறிப்பனவாகும். அன்றியும் ‘நிகர்த்து மேல் வந்த வேந்தனொடு மகட்பாடஞ்சிய மகட்பால்” (புறத்திணையியல் 48) எனவரும் மகட்பாற் காஞ்சியானது, வேந்தன் மகட்கொடை வேண்டிய போது மறக்குலத்தினன் அஞ்சுவதை அறிவிப்பதால் குலமாறுபாடு புலப்படுதலும் அறியலாம். “களிறலைப்பக் கலங்கின காசு” என்னும் புறப்பாடலில் (245) அரசனுக்கு அரச குலத்தார் அல்லாத குலத்துப் பெண் மறுக்கப்பட்டது காணலாம். எனவே நால்வகைக் குல மணமும் பழங்காலத் தமிழரிடை இருந்தமையறியலாம். யாழ்ப்பாணருள் ஆடவர் மட்டும் தனித்துச் செல்வதில்லை. எப்போதும் மனைவியருடனேயே செல்வர். அதனால் அவர், ‘யாழ்த்துணைமையோர்’ எனப் பட்டனர். காட்சிக் காரணம் 90. | ஒன்றே வேறே என்றிரு பால்வயின் | | ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின் ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப மிக்கோ னாயினும் கடிவரை இன்றே (2) |
|