(இ-ள்) : ஒன்றே வேறே என்றிருபால்வயின்1 என்பது ஒருவனும் ஒருத்தியுமாக இல்லறஞ் செய்துழி, அவ்விருவரையும் மறுபிறப்பினும் ஒன்றுவித்தலும், வேறாக்குதலுமாகிய இருவகை ஊழினும் என்றவாறு. ஒன்றி உயர்ந்த பாலதாணையின் என்றது, இருவருள்ளமும் பிறப்புத்தோன்றும் ஒன்றி நல்வினைக் கண்ணே நிகழ்ந்த ஊழினது ஆணையின் என்றவாறு, உயர்ந்ததன் மேற் செல்லும் மன நிகழ்ச்சி உயர்ந்த பாலாயிற்று. காம நிகழ்ச்சியின் கண் ஒத்த அன்பினராய்க் கூடுதல் நல்வினையான் அல்லது வாராதென்பது கருத்து. ஒத்த கிழவனும் கிழத்தியுங் காண்ப என்பது, ஒப்பு பத்து வகைப்படும். அவை, ஒப்பு பத்து வகைப்படும். அவை “பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டோடு உருபு நிறுத்த காமவாயில் நிறையே அருளே உணர்வொடு திருவென முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே” (மெய்ப்-உரு) என்னும் மெய்ப்பாட்டியற் சூத்திரத்துள் கூறிய பத்துமாம். அவற்றுள் பிறப்பாவது அந்தணர், அரசர், வணிகர், வேளாளர், ஆயர், வேட்டுவர், குறவர், நுளையர் என்றாற் போல வருங்குலம். குடிமையாவது அக்குலத்தினுள்ளார் எல்லாருஞ் சிறப்பாக ஒவ்வாமையின் அச்சிறப்பாகிய ஒழுக்கம் பற்றிய குடிவரவைக் குடிமை என்றார். “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்” (குறள்) எனப் பிறரும் குலத்தின் கண்ணே சிறப்பென்பது ஒன்றுண்டென்று கூறினாராகலின். ஆண்மையாவது, ஆண்மைத் தன்மை. அஃதாவது ஆள்வினையுடைமையும் வலிபெயராமையுமாம். “மொழியாததனை முட்டின்று முடித்தல்” (மரபியல்)
1. ஒன்றே...பால் என்பதற்கு நச். உரை பார்க்க, |