பக்கம் எண் :

24தொல்காப்பியம்-உரைவளம்

என்பதனால்1 தலைமகள் மாட்டுப் பெண்மையும் கொள்ளப்படும். அது பெண்டிர்க்கு இயல்பாகிய நாணம் முதலாயினவும் பெண்ணீர்மையும். ஆண்டென்பது, ஒருவரிருவர்2 முதியரன்றி ஒத்த பருவத்தராதல் அது குழவிப் பருவங் கழிந்து3 பதினாறு பிராயத்தானும் பன்னிரண்டு பிராயத்தாளும் ஆதல். உரு என்பது வனப்பு. நிறுத்த காம வாயில் என்பது நிலைநிறுத்தப்பட்ட புணர்ச்சிக்கு வாயில். அஃதாவது ஒருவர் மாட்டு ஒருவர்க்கு நிகழும் அன்பு. நிறை என்பது அடக்கம். அருள் என்பது பிறர் வருத்தத்திற்குப் புரியும் கருணை. உணர்வென்பது அறிவு. திரு என்பது செல்வம். இப்பத்து வகையும் ஒத்த கிழவெனும் கிழத்தியும் எதிர்ப்படுவர் எனக் கொள்க.

“மிக்கோ...இன்றே” என்பது இக்குணங்களால் தலைமகன் மிக்கானாயினுங் கடியப்படாது என்றவாறு,

எனவே, இவற்றுள் யாதானும் ஒன்றினாயினும் தலைமகன் மிக்கானாயின் ஐந்திணையிற் கடியப்படும் என்ற வாறாம்4.

“பாலதாணையின்.....காண்ப” என்பது-ஒருவரையொருவர் கண்டுழியெல்லாம் புணர்ச்சி வேட்கை தோற்றாமையிற் பாலதாணையான் ஒருவரை யொருவர் புணர்தற் குறிப்பொடு காண்ப என்றவாறு. மிக்கோனாயினும் என்ற உம்மை இறந்தது தழீஇய எச்சவும்மை.5 எற்றுக்கு, எதிர்மறையாக்கி, ‘இழிந்தோனாயினும் கடியப்படாது.’ என்றாற் குற்றமென்னை யெனின், செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணி வருகின்ற பெருமையாதனின், இழிந்தானோடு உயர்ந்தாட் குளதாகிய கூட்டமின்மை பெருவழக்காதலின் அது பொருளாகக்* கொள்ளாம் என்பது,


1. சொல்லாததையும் சொன்னதோடு தடையின்றி முடித்துக் கொள்க என்னும் உத்தியால் ஆண்மை சொல்லப்பட்ட இடத்தில் சொல்லாத பெண்மையும் கொள்க.

2. தலைவன் தலைவியருள் யாரேனும் ஒருவரோ அல்லது இருவருமோ.

3. குழவிப் பருவம் காமத்துக்குரியதன்று ஆதலின் அது கழித்து.

4. ஐந்திணையின் நீக்கப்படும்; பெருந்திணையிற் சேர்க்கப்படும் என்பதாம்.

5. ஒத்தலைத்தழீ இயது.

*அது பொருளாக-உம்மை இறந்தது தழீஇயது என்பது பொருளாக.