பக்கம் எண் :

களவியல் சூ. 225

ஈண்டுக் கிழவனும் கிழத்தியும் என ஒருவனும் ஒருத்தியும் போலக் கூறினாராயினும்.

“ஒரு பாற்கிளவியேனைப்பாற் கண்ணும்
வருவகை தானே வழக்கென மொழிப”      (பொருளியல்-26)

என்பதனாலும்1 இந்நூல் உலக வழக்கே நோக்குதலானும் அவர் பலவகைப்படுவர். அஃதாமாறு அந்தணர், அரசர், வணிகர், வினைஞர்2 என்னும் நால்வரொடும் அநுலோமர் அறுவரையும்3 கூட்டப் பதின்மராவர், இவரை நால்வகை நிலத்தொடு உறழ நாற்பதின்மராவர், இவரையும், அந்நிலத்திற்குரிய ஆயர், வேட்டுவர், குறவர், பரதவர் என்னுந் தொடக்கத்தாரோடு கூட்டப் பலராவர், அவரையும் உயிர்ப்பன்மையான் நோக்க4 வரம்பிலராவர்.

நச்.

இது, முற் கூறிய காமக்கூட்டத்திற்கு உரிய கிழவனுங் கிழத்தியும் எதிர்ப்படும் நிலனும் அவ்வெதிர்ப்பாட்டிற்குக்


1. ஒரு பாலில் சொல்லப்பட்டதாயினும் அச்சொல் மற்றைப் பாற் சொற்கண்ணும் வருவது உலக வழக்கு என்பர். அதற்கேற்ப இச்சூத்திரத்து கிழவன் கிழத்தி என ஒருவனையும் ஒருத்தியையும் கூறினாலும் கிழவர், கிழத்தியர் எனப் பன்மையிற் கூறியதாகக் கொள்ளல் வேண்டும். உலக வழக்குப் பலரையும் குறிப்பது ஆதலின் இந்நூலும் பலரை நோக்கியே ஒருமையாற் கூறியதாகும்.

2. வினைஞர்-வேளாளர்.

3. அநுலோமர் அறுவர் (1) பிராமணர் மற்றை வருணத்துப் பெண்டிருடன் கூடி அல்லது மணந்து பெற்றவர். (2) அரசர் தம் கீழ் வருணத்துப் பெண்டிருடன் கூடப் பிறந்தவர். (3) வணிகர் வேளிர் பெண்டிருடன் கூடப் பிறந்தவர் (4) வேளாளர் மேலுள்ள மூன்று வருணத்துப் பெண்டிருடன் கூடப் பிறந்தவர் (5) வணிகர் மேலுள்ள அரச அந்தணப் பெண்டிருடன் கூடப் பிறந்தவர். (6) அரசர் அந்தண வருணத்துப் பெண்டிருடன் கூடப் பிறந்தவர். இவருள் முதல் மூவரை அநுமலோமர் என்றும், பின் மூவரைப் பிரதிலோமர் என்றும் கூறுவர். இது ஆரிய வழக்கு. தமிழ் வழக்கு மாறானது.

4. உயிர்ப்பன்மையான் நோக்குதல்-தனித்தனி உயிர்களாகப் பார்த்தல்.