பக்கம் எண் :

26தொல்காப்பியம்-உரைவளம்

காரணமும் அங்ஙனம் எதிர்ப்படுதற்கு உரியோர் பெற்றியுங் கூறுகின்றது.

(இ-ள்) :- ஒன்றே வேறே என்று இருபால் வயின்1- இருவர்க்கும் ஓரிடமும். வேற்றிடமும் என்று கூறப்பட்ட இருவகை நிலத்தின் கண்ணும், ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின் -உம்மைக் காலத்து எல்லாப் பிறப்பினும் இன்றியமையாது உயிரொன்றி ஒருகாலைக் கொருகால் அன்பு முதலியன சிறத்தற்கு ஏதுவாகிய பால்வரை தெய்வத்தின் (273) ஆணையாலே, ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப-பிறப்பு முதலியன பத்தும் ஒத்த தலைவனுந் தலைவியும் எதிர்ப்படும், மிக்கோன் ஆயினும் கடிவரை இன்றே-அங்ஙனம் எவ்வாற்றானும் ஒவ்வாது தலைவன் உயர்ந்தோனாயினுங் கடியப்படா என்றவாறு.

‘என்றிருபால் வயிற் காண்ப’ எனப்பால் ‘வன்பால் மென் பால்’ போல நின்றது2. உயர்ந்த பாலை ‘நோய் தீர்ந்த மருந்து, போற் கொள்க3. ஒரு நிலம் ஆதலை4 முற் கூறினார். இவ்வொழுக்கத்திற்கு ஓதியது குறிஞ்சி நிலமொன்றுமே ஆதற் சிறப்பு நோக்கி வேறு நிலம் ஆதலைப்பிற் கூறினார்.5

குறிஞ்சி தன்னுள்ளும் இருவர்க்கும் மலையும் ஊரும் வேறா தலுமன்றித் திணை மயக்கத்தான் மருதம் நெய்தலென்னும் நிலப் பகுதியுள் ஒருத்தி அரிதின் நீங்கி வந்து எதிர்ப்படுதல் உளவாதலுமென வேறுபட்ட பகுதி பலவும் உடன் கோடற்கு. ஒரு நிலத்துக் காமப் புணர்ச்சிப் பருவத்தானாயினாளை


1. இதற்கு இளம். உரைபார்க்க.

2. வன்பால்-வன்னிலம், மென்பால் - மென்னிலம் இது போல் இங்குப் பால் என்பது நிலம் என்னும் பொருளில் நின்றது.

3. நோய் தீர்ந்த மருந்து-நோய் தீர்தற்குக் காரணமான மருந்து அதுபோல ‘உயர்ந்த பால்’ என்பதற்கு ‘உயர்தற்குக் காரணமான நிலம்’ எனக் கொள்க.

4. ஒரு நிலம் ஆதல். தலைவன் தலைவியிருவரும் வாழும் நிலம் ஒன்றாதல்.

5. களவொழுக்க நிகழ்ச்சிகள் யாவும் புணர்ச்சியும் புணர்ச்சி நிமித்தமுமாக அமைதலின் களவொழுக்கத்துக்குரிய நிலம் குறிஞ்சி நிலம் ஒன்றேயாகும். பிற நிலம் உரியவாதல் சிறுபான்மையும் சிறப்பின்மையுமாம். அதனால் தலைவன் தலைவியர் நிலம் வேறு வேறாய் அமைவதைப் பிற்கூறினார் என்பது கருத்து.