பக்கம் எண் :

252தொல்காப்பியம்-உரைவளம்

நிகழினும் ஆண்டு முற்காலத்து நிகழ்ந்த ஆற்றாமை பற்றி அவ்விரண்டுங் கூறும்.

(உ-ம்)

“நன்னா டலைவரு மெல்லை நமர்மலைத்
தம்நாண்தாம் தாங்குவா ரென்னோற் றனர்கொல்
புனவேங்கைத் தாதுறைக்கும் பொன்னறை முன்றி
னனவிற் புணர்ச்சி நடக்குமா மன்றோ
நனவிற் புணர்ச்சி நடக்கலு மாங்கே
கனவிற் புணர்ச்சி கடிதுமா மன்றோ”1      (கலி-39)

என நாண் தாங்கி ஆற்றுவாரும் உளரோவெனவுங் கனவிற் புணர்ச்சி கடிதுமெனவும் இரண்டுங் கூறினாள்2

“கொல்லைப் புனத்த வகில்சுமந்து கற்பாய்ந்து
வானி னருவி ததும்பக் கவினிய
நாட னயமுடைய னென்பதனா னீப்பினும்
வாடன் மறந்தன தோள்”3      (ஐந்-எழு-2)

‘நயனுடையன்’ என்பதனால் வரைவு தலைவந்தமையும், ‘நீப்பினும்’ என்பதனால் அவன்வயிற் பரத்தமையுங் கூறினாள்.

களவு அறிவுறினும்-தம் ஒழுகலாறு புறத்தார்க்குப் புலனாகத் தலைவன் ஒழுகினும், ஆண்டும் அவ்விரண்டுங் கூறும்.


1. கருத்து: நாணம் மிக்குவரும்காலத்துத் தம் நாணைத் தாங்குவார் என்ன தவம் செய்தனரோ? அப்படி நாம் நாண் தாங்கியிருந்தமையின் வேங்கை மலர்த் தாது சொரியும் பாறையுள்ள முற்றத்தில் நனவிலேயே தலைவனுடன் புணர்ச்சி நடக்குமோ? அப்படி நடக்குமானால் அவனைக் கனவிற் புணர்தலை நாம் கடிவோம் அன்றோ.

2. ஆற்றுவார் உளரோ என்றதால் தான் ஆற்றுவதாகத் தன் வயின் உரிமையும் கனவிற் புணர்ச்சி கடிதும் என்று கூறுவதால் அவன் வாராமை சுட்டி அவன் வயின் பரத்தமையும் கூறியவாறு.

3. கருத்து: பக்கம் 213ல் காண்க.