பக்கம் எண் :

களவியல் சூ. 21253

(உ-ம்)

“நாண்மழை தலைஇய நன்னெடுங் குன்றத்து
மால்கடற் றிரையி னிழிதரு மருவி
யகலிருங் கானத் தல்கணி நோக்கித்
தாங்கவுந் தகைவரை நில்லா நீர்சுழல்
போதெழின் மழைக்சுண் கலுழ்தலி னன்னை
யெவன்செய் தனையோநின் னிலங்கெயி றுண்கென
மெல்லிய வினிய கூறலின் வல்விரைந்
துயரினுஞ் சிறந்த நாணு நனிமறந்
துரைக்கலுய்ந் தனனே தோழி சாரற்
காந்த ளூதிய மணிநிறத் தும்பி
தீந்தொடை நரம்பி னிமிரும்
வான்றோய் வெற்பன் மார்பணங் கெனவே” 1      (நற்றிணை-17)

யான் அவனை எதிர்ப்பட்ட இடங்கண்டு அழுதேனாக அதனைக்கண்டு நீ எவன் செய்தனையென வினாய அன்னைக்கு, இம் மறையினைக் கூறலுற்றுத் தவிர்ந்தேனெனத் தாய் களவறி வுற்றவாறு கூறக் கருதி, அவன்வயிற் பரத்தைமை கூறிற்று.

தமர் தற்காத்த காரண மருங்கிணும்-அங்ஙனங் களவறிவுற்ற அதன்றலைச் செவிலி முதலிய சுற்றத்தார் தலைவியைக் காத்தற்கு ஏதுவாகிய காரணப் பகுதிக் கண்ணும்.

ஆண்டுந் தமரை நொந்துரையாது அவன்வயிற் பரத்தைமை கூறும்.

காரணமாவன:- தலைவி தோற்றப் பொலிவும் வருத்தமும் அயலார் கூறும் அலருமாம்.


1. கருத்து; தோழீ! மலையிற் பெய்த மழை கடலலை போல் அருவியாக இழிந்து கானலிடத்துத் தங்கும் அழகைப் பார்த்து இவ்விடம் தலைவன் புணர்ந்த இடம் என்ற நினைவு வரவே, கண்கலுழ அது கண்ட அன்னை ஏன் அழுகிறாய் மகளே! முத்தம் தருவேன்’ என்று இனியன கூறலின், அவளுக்கு வான்தோய் வெற்பன் மார்பைப் பிரிந்தமையால் வந்த வருத்தத்தால் அழா நின்றேன் எனக் கூறத் தொடங்கி உடனே நிறுத்தி விட்டுத் தப்பினேன்.