வலவ னாய்ந்த வண்பரி நிலவுமணற் கொட்குமோர் தேருண் டெனவே” 1 (அகம்-20) “பெருங்கடற் றிரையது சிறுவெண் காக்கை களிற்றுச் செவியன்ன பாசடை மயக்கிப் பனிக்கழித் துழவும் பானாட் டனித்தோர் தேர்வந்து பெயரு மென்ப வதற்கொண் டோரு மலைக்கு மன்னை பிறரும் பின்னுவிடு கதுப்பின் மின்னிழை மகளி ரிளையரு முதியரு முளரே யலையாத் தாயரொடு நற்பா லோரே” 2 (குறுந்-246) இவை பிறர் கூற்றால் தமர் காத்தன. “முலைமுகஞ் செய்தன முள்ளெயி றிலங்கின தலைமுடி சான்ற தண்டழை யுடையை யலமர லாயமொடி யாங்கணும் படாஅல் மூப்புடை முதுபதி தாக்கணங் குடைய காப்பும் பூண்டிசிற் கடையும் போகலை பேதை யல்லை மேதையங் குறுமகள் பெதும்பைப் பருவத் தொதுங்கினை புறத்தென
1. கருத்து: தோழீ! மீன் உணங்கலிற்படுபுள்ளை ஓட்டியும், புன்னை நிழலில் தங்கி நண்டின் வளையைத் தோண்டியும் தாழை விழுதுக் கயிற்றில் ஊசலாடியும் மணலிற் குரவையாடியும் அது வெறுத்தால் ஆயத்தாரோடு கடல் ஆடியும் பூந்தழை தைத்தும் இப்படியாகக் கானலில் நாம் தங்கி வருதற்கு, ஆரவாரமிக்க தெய்வம் உறையும் இவ்வூரிலுள்ள கொடுமை கூறுதலையேயறியும் பெண்டிர்கள் இரவும்பகலும் வலவன் ஓட்டப் பரிபூணும் ஓர் தேர் இப் பெருந்துறையில் சுழன்று கொண்டிருக்கும் எனக் கூறிய சொற்கேட்டு அன்னையானவள் நம்மை இற்செறித்தாள். 2. கருத்து: தோழீ! நம் கடற்கரைப் பக்கமாக நள்ளிரவில் தனித்து ஓர் தேர் வந்து பெயர்ந்தது என்பர். அது கொண்டு நம் அன்னை நம்மை அலைக்கும். இவ்வூரில் இளையரும் மடப்பம் உடையோருமான பிற மகளிரும் தம் தாயரொடு அவர் வருந்தாத நல்வினையுடையோராய் இருந்தனர். |