பக்கம் எண் :

270தொல்காப்பியம்-உரைவளம்

புன்னையம் பூங்கானற் சேர்ப்பனைத் தக்கதோ
நின்னல்ல தில்லென் றுரை” 1      (ஐந்திணையெழு-58)

எனவரும்.

நச்.

இதுவும் அதிகாரத்தால் தலைவி கூற்று இன்னவாறுமாம் என்கின்றது.

(இ-ள்) : வரைவிடை வைத்த காலத்து வருந்தினும்-வரைவு மாட்சிமைப்படா நிற்கவும் பொருள் காரணத்தான் அதற்கு இடையீடாகத் தலைவன் நீக்கி வைத்துப் பிரிந்த காலத்துத் தலைவி வருத்தமெய்தினும்.

ஆண்டுத்2 தோழி வினவாமலும் தானே கூறுமென்றான் ஆற்றுவித்துப் பிரிதல் களவிற்குப் பெரும்பான்மை இன்மையின் ‘வைத்த’ என்றது நீக்கற் பொருட்டு. வருந்துதல் - ஆற்றுவிப்பாரின்மையின் வருத்தமிகுதலாம்.

வரையா நாளிடை வந்தோன் முட்டினும்-வரையாதொழுகுந் தலைவன் ஒரு ஞான்று தோழியையானும் ஆயத்தையானுஞ் செவிலியையானுங் கதுமென எதிர்ப்பினும்:

உரையெனத் தோழிக்கு உரைத்தற் கண்ணும்-நொதுமலர் வரைவிற்கு மணமுரசியம்பியவழியானும் பிறாண்டானுந் தோழிக்கு இன்னவாறு கூட்டம் நிகழ்ந்ததெனக் கூறி அதனை நமரறியக் கூறல் வேண்டுமென்றுந் தலைவற்கு நம் வருத்தமறியக் கூறல் வேண்டுமென்றுங் கூறுதற் கண்ணும்; தானேகூறும் காலமும் உளவே-இம் மூன்று பகுதியினுந் தோழி வினவாமல் தலைவி தானே கூறுங் காலமும் உள என்றவாறு.

உம்மையால் தோழி வினவிய இடத்துக் கூறலே வலியுடைத்து.


1. கருத்து : தோழீ! அவரிடத்தும் விரைந்து வரைந்து கொள்ளும் நல்லெண்ணம் இல்லை. தாயின் முகமும் (களவறிதலின்) அதுபோல் நன்றாக இல்லை. அதனாற் சேர்ப்பனிடம் நின்னையன்றி வேறு துணையில்லையாதலின் விரைந்து வரைந்துகொள் என்று உரைப்பாயாக.

2. ஆண்டு-தலைவன் பொருள் காரணத்தான் பிரிந்தவிடத்தும்.