என்புழிப் பொய்த்தவன் மலையும் இலங்கும் அருவித்தென வியந்து கூறித் தமது மலைக்கு நன்றி இயல்பென்றலிற் குறிஞ்சி யுள்ளும் மலை வேறாயிற்று. “செவ்விரல் சிவப்பூரச் சேட்சென்றா யென்றவன் பௌவ நீர்ச்சாய்க் கொழுதிப்பாவைதந் தனைத்தற்கோ கௌவை நோயுற்றவர் காணாது கடுத்தசொல் லொவ்வா வென்றுணராய் நீ யொருநிலையே1 யுரைத்ததை”. (கலி-76) இது, மருதத்துத் தலைவி களவொழுக்கங் கூறுவான் பௌவ நீர்ச் சாய்ப்பாவை தந்தான் ஒருவனென நெய்தனிலத்து’ எதிர்ப் பட்டமை கூறியது. ஆணைவிதி கைகோளின் முதற்கட் கூறுதலிற் கற்பின் காறும் ஒன்றும் வேறுஞ் செல்லும். பாலது ஆணையும் அவ்வாறாம். மிகுதலாவது: குலங் கல்வி பிராயம் முதலியவற்றான் மிகுதல். எனவே, அந்தணர், அரசர் முதலிய வருணத்துப் பெண் கோடற்கண் உயர்தலும், அரசர் முதலியோரும் அம்முறை உயர்தலுங் கொள்க. இதனானே அந்தணர் முதலியோர் அங்ஙனம் பெண்கோடற்கட் பிறந்தோர்க்கும் இவ்வொழுக்கம் உரித்தென்று கொள்க. கடி-மிகுதி2 அவர் அங்ஙனங் கோடற்கண் ஒத்த மகளிர் பெற்ற புதல்வரோடு ஒழிந்த மகளிர் பெற்ற புதல்வர் ஒவ்வாரென்பது உணர்த்தற்குப் பெரிதும் வரையப்படாதென்றார். பதினாறு தொடங்கி இருபத்து நான்கு ஈறாகக் கிடந்த யாண்டொன்பதும் ஒரு பெண்கோடற்கு மூன்றியாண்டாக அந்தணன் உயரும் கந்தருவ மணத்து; ஒழிந்தோராயின் அத்துணை உயரார்.
1. கருத்து. அலர் தூற்ற ஒன்றும் இல்லையே என்று வருந்திய ஊர்மகளிர் ஆராயாமலே என்னைப் பற்றித் தூற்றிய சொற்களை இவளைச் சாராது என்றுணராமல் அவர்கள் போலவே நீயும் உரைத்தது எது நோக்கி? செவ்விரல் மேலும் சிவக்க இத்தட்டையினைப் பறிக்க நீண்டகாலம் போக்கினாய் என்று கூறி பஞ்சாயத் தட்டையைப் பறித்துப் பாவை செய்து தந்துபோனானே ஒருவன் அது நோக்கியோ? 2. கடிவரையின்று என்பதற்கு நீக்கும் நிலைமையின்று எனப் பொருள் கொள்ளல் நன்று. மிகுதியும் வரையப்படாது எனப் பொருள் கொண்டமையால் மிகுதலாவது யாது என இவ்விளக்கம் எழுத வேண்டுவதாயிற்று. |