பக்கம் எண் :

களவியல் சூ. 229

இருபத்து நான்கிரட்டி நாற்பத்தெட்டாதல் பிரம முதலியவற்றான் உணர்க. ‘வல்லெழுத்து மிகுதல்’1 என்றாற் போல மிகுதலைக் கொள்ளவே பிராயம் இரட்டியாயிற்று. கிழத்தி மிகுதல் அறக்கழிவாம். ‘கிழவன் கிழத்தி’ எனவே பல பிறப்பினும் ஒருவர்க்கு ஒருவர் உரிமை எய்திற்று. இங்ஙனம் ஒருமை கூறிற்றேனும் ‘ஒரு பாற் கிளவி’ (222) என்னுஞ் சூத்திரத்தான் நால்வகை நிலத்து நான்கு வருணத்தோர் கண்ணும் ஆயர் வேட்டுவர் முதலியோர் கண்ணுங் கொள்க.

இச் சூத்திரம் ‘முன்னைய நான்கும்’2 (52) எனக் கூறிய காட்சிக்கு இலக்கணங் கூறிற்றென்றுணர்க.

(உ-ம்)

“கருந்தடங் கண்வண்டாகச் செவ்வாய் தளிரா
வரும்பிவர் மென்முலை தொத்தாப்-பெரும் பணைத்தோட்
பெண்டகைப் பொலிந்த பூங்கொடி
கண்டேங் காண்டலுங் களித்த வெங்கண்ணே” 3      (பு. வெ. கைக்-1)

இக்காட்சிக் கண் தலைவனைப் போல் தலைவி வியந்து கூறுதல் புலனெறி வழக்கன்மை உணர்க.

வெள்.

இயற்கைப் புணர்ச்சிக்கண் ஒத்த அன்பினராய ஒருவனும் ஒருத்தியும் எதிர்ப்பட்டுக் காணுமாறு கூறுகின்றது.

(இ-ள்) : ஒருவனும் ஒருத்தியும் கூடிவாழும் மனையறத்தின் பயனாக அவ்விருவரையும் பிறப்புத்தோறும் சேர்த்து வைப்பதும் பிரித்து விலக்குவதும் ஆகிய இருவகை யூழிலும் இருவர் உள்ளமும்


1. ‘வல்லெழுத்து மிகுதல்’ என்றவிடத்து வல்லெழுத்து இரட்டித்தல் எனப் பொருள் கொள்வது போல இங்கு மிகுதல் என்பது இரட்டித்தல் எனப் பொருள் கொள்ளப்பட்டது.

2. முன்னைய நான்கு என்பன இயற்கைப் புணர்ச்சிக்கு முன்னர் நிகழும் காட்சி, ஐயம், தெளிவு, தேறல் என்பன அக்காட்சிக்கு இச்சூத்திரம் இலக்கணம் கூறியது என்க.

3. கருத்து கண்ணே வண்டாக செவ்வாயே தளிராத முலையே அரும்பாகக் கொண்டு பெருந்தோளையுடைய ஒரு பெண் போல அமைந்த பூங்கொடியைக் கண்டேம்; கண்டதும் எம் கண்கள் களிப்புற்றன. இது தலைவன் தலைவியைக் கண்டு வியந்து கூறியது.