எக்காலத்தும் ஒன்றி வாழ்தற்கேற்ற நல்லூழின் ஆணையால் ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும் தம்முன் எதிர்ப்பட்டுக் காண்பர். தலைவன் உரு திரு முதலியவற்றால் மிக்கவனாயினும் குற்றம் இல்லை எ-று. ஒன்றுவித்தலைச் செய்யும் நல்லூழினை ‘ஒன்று’ எனவும் வேறுபடுத்தலைச் செய்யும் போகூழினை ‘வேறு’ எனவும் கூறினார் ஆசிரியர். இவ்வாறு ஒருவனும் ஒருத்தியும் எதிர்ப்படும் முதற்காட்சிக்கு நல்லூழின் ஆணையே காரணம் என்பார் ‘உயர்ந்த பாலது ஆணையின்’ என்றும், அவ்வூழின் ஆணைக்குக் காரணமாவது அவ்விருவரும் பண்டைப் பிறப்புக்களிற் பயிலியது கெழீஇய நட்பு என்பார் ‘ஒன்றியுயர்ந்த பாலது ஆணை’ என்றும், பல பிறவியிலும் பழகிய அன்பின் தொடர்ச்சியே ஒருவரையொருவர் இன்றியமையாதவராகக் காணுதற்குரிய காதற் கிழமையை வழங்கியது என்பார் ‘ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப’ என்றும் கூறினார். பாலது ஆணையாவது வினை செய்த உயிர்கள் நுகர்தற்குரிய இருவினைப் பயன்கள் ஏனை யுயிர்கள் பாற் செல்லாது வினைகளைச் செய்த உயிர்களே நுகரும் வண்ணம் முறை செய்து நுகர்விப்பதாகிய இறைவனது ஆற்றல். இதனைப் ‘பால் வரை தெய்வம்’ (தொல். கிளவி-58) என்ற தொடராலும் ஆசிரியர் குறித்துள்ளமை காணலாம். தலைவனுக்கும் தலைவிக்கும் அமைந்த ஒத்த பண்புகளாவன பிறப்பு, குடிமை, ஆண்மை, ஆண்டு, அழகு, அன்பு. நிறை, அருள், உணர்வு, திரு என்னும் இப்பத்துமாகும். காணுதல் என்றது தனக்குச் சிறந்தாராகக் கருதுதலை. சிவலிங்கனார் இச்சூத்திரம் தலைவனும் தலைவியும் முதன் முதலில் ஒருவரையொருவர் காணும் காட்சி பற்றியது. காட்சி பாலது (ஊழது) ஆணையின் நிகழ்வது. பாலது ஆணைக்குக் காரணம் தலைவனும் தலைவியும் பிறவிதோறும் பிரியாது ஒன்றிவரும் உயர்வேயாகும். அவ்வுயர்வே இப்பிறவியிலும் தலைவனும் தலைவியும் காண்பதற்குக் காரணம் ஆம். அவ்வுயர்வே பாலாக அமைந்து ஆணையிடும். |