பக்கம் எண் :

களவியல் சூ. 231

என்பது இச் சூத்திரத்தால் விளங்குவது. ஆதலின் இளம்பூரணர் “ஒன்றே வேறே......காண்ப” என்பதற்கு,

“ஒருவனும் ஒருத்தியுமாக இல்லறஞ் செய்துழி
அவ்விருவரையும் மறுபிறவியினும் ஒன்று
வித்தலும் வேறாக்குதலுமாகிய இருவகை யூழி
னும், இருவருள்ளமும் பிறப்புத் தோறும்
ஒன்றி நல்வினைக் கண்ணே நிகழ்ந்த
ஊழினது ஆணையின்......காண்ப”

என்றுரைத்தது மிகப் பொருந்தும்.

நச்சினார்க்கினியர், ‘ஒன்றியுயர்ந்த பாலது ஆணை’ என்பதற்கு,

“உம்மைக் காலத்து எல்லாப் பிறப்பினும்
இன்றியமையாது உயிர்ஒன்றி ஒருகாலைக்
கொருகால் அன்பு முதலியன சிறத்தற்கு ஏது
வாகிய பால்வரை தெய்வத்தின் ஆணை”

எனப் பொருள் உரைத்தார்.

இதில் “உம்மைக் காலத்து எல்லாப் பிறப்பினும்........உயிர் ஒன்றி....சிறத்தற்கு ஏதுவாகிய பால்” என்றதால் பிறவிதோறும் ஒன்றுவிக்காமல் வேறுபடுத்தும் பாலும் உண்டு என்பது பெறப்படும் எனக் கருதியதால், ‘ஒன்றே வேறே என்றிரு பால்வயின்’ என்பதற்கு வேறு பொருள் கூறுவது சிறக்கும் எனக் கருதினாராவர். அதனால் அவர் அதற்கு,

“இருவர்க்கும் ஓரிடமும் வேறிடமும் என்று கூறப்பட்ட இரு வகை நிலத்தின் கண்ணும்” என்று உரை கூறினார்.

இளம்பூரணர் உரையால் பால், ஒன்றுவிப்பதும் வேறுபடுப்பதும் என இருவகைப்படும் என்பதும், அவற்றுள் ஒன்றுவிக்கும் பாலே காட்சிக்கு ஆணையிடும் என்பதும் பெறப்படும். நச்சினார்க்கினியர் உரையால், அக்கருத்துகளில் இரண்டாவது குறிப்பாகவும் முதலாவது வெளிப்படையாகவும் பெறப்படுதலோடு; காணும் நிலம் தலைவனுக்கும் தலைவிக்கும் உரிய ஓரிடமாகவோ அல்லது வெவ்வேறிடங்களுள் ஒன்றாகவோ அமையும் என்னும் கருத்தும் பெறப்படும். அதனால் நச்சினார்க்கினியர் உரை இச்சூத்திரத்துக்குச் சிறக்கும் என்னலாம்.