பக்கம் எண் :

282தொல்காப்பியம்-உரைவளம்

நச்.

இது தலைவி கூற்றிற்குச் சிறப்பில்லன கூறி, அவையும் அகப்பொருளாம் என்கின்றது.

(இ-ள்) : உயிரினும் நாண் சிறந்தன்று-எல்லாவற்றினுஞ் சிறந்த உயிரினும் மகளிர்க்கு நாண் சிறந்தது. நாணினுஞ் செயிர்தீர் கற்புக் காட்சி சிறந்தன்று-அந் நாணினுங் குற்றந் தீர்ந்த கற்பினை நன்றென்று மனத்தாற் காணுதல் சிறந்தது, எனத் தொல்லோர் கிளவி புல்லிய நெஞ்சமொடு-என்று முன்னுள்ளோர் கூறிய கூற்றினைப் பொருந்திய நெஞ்சுடனே, காமக் கிழவன் உள்வழிப்படினும்-தலைவன் இருந்தவிடத்தே தலைவி தானே செல்லினும், தாவில் நன்மொழி கிழவி கிளப்பினும் மனவலியின்றிச் செல்வாமெனக் கூறும் நன்மொழியினைத் தலைவி தானே கூறினும், பொருள் தோன்றும்-அவை அகப் பொருளாய்த் தோன்றும், ஆவகை பிறவும் மன்பொருள் தோன்றும்-அக் கூற்றின் கூறுபாட்டிலே பிற கூற்றுக்களும் மிகவும் அகப்பொருளாய்த் தோன்றும் என்றவாறு.

என்றது, தலைவி கூற்று, சிறுபான்மை வேறுபட்டு வருவன வற்றைக் கற்புச் சிறப்ப நாண் துறந்தாலுங் குற்றம் இன்றென்றற்குச் ‘செயிர்தீ’ ரென்றார். ‘நன்மொழி’ யென்றார் கற்பிற்றிரியாமையின்: அவை இன்னோரன்ன வழி நெஞ்சொடு கிளத்தல் போல்வன, இவள் கூற்றுத் தோழிக்குந் தலைவற்குமே தோன்றுவதென்க.

மன்-ஆக்கம், இழிந்த பொருளும் உயரத் தோன்றலின்

“மள்ளர் குழீஇய விழவி னானு
மகளிர் தழீஇய துணங்கை யானும்
யாண்டுங் காணேன் மாண்தக் கோனை
யானுமோ ராடுகள மகளே யென்கைக்
கோடீ ரிலங்குவளை ஞெகிழ்த்த
பீடுகெழு குரிசிலுமோ ராடுகள மகனே” 1      (குறுந்-31)


1. கருத்து: வில்வீரர் குழுமிய வில்விழா விடத்திலும், மகளிரின் துணங்கைக் கூத்திடத்தும் வேறிடத்தும் எங்கும் மாட்சிமிக்க என் தலைவனைக் காணேன். யானும் ஓர் ஆடுகளமகளே. அவனும் ஓர் ஆடுகளமகனே. (ஆடுகளமகள்-களங் குறித்து அங்கு ஆடும் மகள்)