(உ-ம்) “புன்தலை மந்திக் கல்லா வன்பறழ் குன்றுழை நண்ணிய முன்றில் போகாது எரியகைந்து அன்ன வீததை இணர வேங்கையம் படுசினைப் பொருந்திக் கைய தேம்பெய் தீம்பால் வௌவலிற் கொடிச்சி எழுதெழில் சிதைய அழுத கண்ணே தேர்வண் சோழர் குடந்தை வாயில் மாரியங் கிடங்கின் ஈரிய மலர்ந்த பெயலுறு நீலம் போன்றன விரலே பாஅய அவ்வயிறு அலைத்தலின் ஆனாது ஆடுமழை தவழுங் கோடுயர் பொதியின் ஓங்கிருஞ் சிலம்பில் பூத்த காந்தளங் கொழுமுகை போன்றன சிவந்தே” 1 (நற்றிணை-379) எனவரும். முன்னுறு புணர்ச்சி முறை நிறுத்துரைத்தலும் என்பது-முன்னுறு புணர்ச்சி முறையே நிறுத்துக் கூறலும் என்றவாறு. நிறுத்தக் கூறலாவது நீங்கவிடாது உடன்பட்டுக் கூறல். இன்னும் முன்பு கூடினாற்போலக் கூட அமையுமென்று கூறுதல். உதாரணம் வந்தவழிக் காண்க. அஞ்சி அச்சுறுத்தலும் என்பது - தான் அச்சமுற்று அஞ்சின தன்மையைத் தலைவற்கு அறிவித்தலும் என்றவாறு. அது யாய் வருவளென்றானும் தமையன்மார் வருவரென்றானும் காவலர் வருவரென்றானும் கூறுதல்.
1. கருத்து: தலைவ! எம் தோழி தான் பருகுதற்குக் கையிற் கொண்ட பாலை வேங்கை மரக் கிளையில் இருந்த புன்தலை மந்தியின் குட்டியானது வவ்வியதால் தன் அழகு சிதையுமாறு அழுதாள். அழுததால் இவள் கண்கள் சோழரது குடவாயில் என்னும் ஊரில் மழை பெய்ததால் நிரம்பிய அகழியில் மலர்ந்த மழைத்துளிகளை ஏற்ற நீலமலர்கள் போன்றன. இவள் விரல்கள் தன் வயிற்றில் அடித்துக் கொண்டதால் காந்தள் மலர் போலச் சிவந்தன. நீ அறிக. |