(உ-ம்) “யானை உழலும் அணிகிளர் நீள்வரைக் கானக வாழ்க்கைக் குறவர் மகளிரேம் ஏனலுள் ஐய வரவுமற் றென்னைகொல் காணினுங் காய்வர் எமர்”1 (திணை மொழி-6) எனவரும். உரைத்துழிக் கூட்டமொடு என்பது-நின்னாற் காதலிக்கப் பட்டாள் யாவள் என வினாயவழி இத்தன்மையாள் எனச் சொல்லக் கேட்ட தோழி அவளும் நின் தன்மையாள் என இவனோடு கூட்டியுரைத்தலும் என்றவாறு. ஒடு எண்ணின் கண் வந்தது.2 (உ-ம்) “நெறிநீர் இருங்கழி நீலமுஞ் சூடாள் பொறிமாண் வரியலவன் ஆட்டலும் ஆட்டாள் திருநுதல் வேரரும்பச் சிந்தியா நின்றாள் செறிநீர்த்தண் சேர்ப்பயா னென்சொல்லிச் சேர்கேன்”3 எனவரும்.
1. கருத்து: யானைகள் திரியும் மலைக் கானத்து வாழ்க்கையையுடைய குறவர் மகளிர் யாங்கள். உயர் குலத்தாராகிய தாங்கள் இத்தினைப் புனத்துள் வருதல் என் கருதி? ஐய! நும்மை எம்மவர் காணினும் காய்ந்து தீங்கு விளைப்பர். 2. கூட்டமொடு என்பதற்குக் கூட்டியுரைத்தலொடு என்பது பொருள். உரைத்துழிக் கேட்டலும் கூட்டி யுரைத்தலும் எனக் கோடலின் ஒடு எண்ணின் கண் வந்தது என்றார். 3. கருத்து: எம் தலைவி கழிநீலமும் சூடவில்லை. நண்டுகளைப் பிடித்து ஆட்டவும் இல்லை. நுதல் வேர்க்க எதையோ சிந்தித்துக் கொண்டே இருக்கின்றாள். தண்ணிய சேர்ப்பனே! யான் என் சொல்லி அவளிடம் செல்வேன். இதில் தலைவன் போலவே தலைவியும் தனிமையினால் வருந்துவதாகக் கூறியது கண்டுணர்க. |