பக்கம் எண் :

298தொல்காப்பியம்-உரைவளம்

எஞ்சாது கிளத்த இருநான்கு கிளவியும் என்பது-ஒழியாது கூறிய எட்டுக் கூற்றும் என்றவாறு. முன்னைப் புணர்ச்சிமுறை யறிந்தாளாதலின் அவன் இரந்து பின்னின்றுழி ஈண்டுக் கூறிய எல்லாம் அவன் உள்ளக் கருத்தறியுந் துணையும் தழீஇக் கொண்டு கூறினல்லது ஒழித்தல் பொருளாகக் கூறாள் என்பது கொள்ளப்படும். இவை எட்டும் குறையுறவுணர்தலின் பகுதி.

வந்த கிழவனை மாயஞ் செப்பிப் பொறுத்த காரணங் குறித்த காலையும் என்பது-மாயம் சொல்லி வந்த கிழவனைத் தலைவி பொறுத்த காரணம் குறித்த காலையும் தோழி கூற்று நிகழும் என்றவாறு.

அவ்வழித் தலைவன் குறிப்பும் தலைவி குறிப்பும் உணர்தலும் தலைவன் கேட்டதற்கு மாற்றம் கூறுதலும் உளவாம். மாயம் செப்பி வந்த கிழவன் என மாற்றுக. மாயம் செப்புதலாவது யானை போந்ததோ மான் போந்ததோ எனக் கூறல்.

“இரந்து குறையுறாது கிழவியுந் தோழியும்
ஒருங்குதலைப் பெய்த செவ்வி நோக்கிப்
பதியும் பெயரும் பிறவும் வினாஅய்ப்
புதுவோன் போலப் பொருந்துபு கிளந்து
மதியுடம் படுத்தற்கும் உரியன் என்ப”.      (இறையனாரகப்-6)

என்பதனாற் குறையுற வுணர்தல் நிகழ்ந்துழி இது நிகழாதென்று கொள்க.

அதன்கண் குறிப்பு உணர்வதற்குச் செய்யுள்:-

“வேங்கை மலர வெறிகமழ் தண்சிலம்பின்
வாங்கமை மென்தோள் குறவர் மகளிரேம்
சோர்ந்து குருதி ஒழுகமற் றிப்புறம்
போந்ததில் ஐய களிறு” 1      (திணைமொழி-8)

எனவும்,


1. கருத்து: ஐய! யாங்கள் வேங்கை மலர மணம் கமழும் தண்ணிய மலையில் வாழும் மகளிர். யாங்கள் கிளி கடியும் இப்புனத்தில் நின்னால் வேலெறியப்பட்டதால் குருதி சோரக் களிறு வந்ததில்லை.