“நெடுந்தேர் கடைஇத் தமியராய் நின்று கடுங்களிறு காணீரோ என்றீர்-கொடுங்குழையார் யானை அதருள்ளி நிற்பரோ தம்புனத்துள் ஏனற் கிளிகடிகு வார்”1 எனவும், “ஏனல் காவல் இவளும் அல்லள் மான்வழி வருகுவன் இவனும் அல்லன் நரந்தங் கண்ணி இவனோ டிவளிடைக் கரந்த உள்ளமொடு கருதியது பிறிதே நம்முன் நாணினர் போலத் தம்முள் மதுமறைந் துண்டோர் மகிழ்ச்சி போல உள்ளத் துள்ளே மகிழ்ப சொல்லும் ஆடுப கண்ணி னானே” 2 எனவும் குறிப்புணர்ந்து இருவரும் முள்வழி அவன் வர வுணர்தல். புணர்ந்தபின் அவன்வயின் வணங்கற் கண்ணும் என்பது-மேற்சொல்லப்பட்ட மூவகையானும் புணர்ச்சியுண்மை பொருந்தியபின் தலைவன்கண் தாழ நிற்றற்கண்ணும் என்றவாறு. அது நீ கருதியது முடிக்கற்பாலை எனவும் நீ இவளைப் பாதுகாத்தல் வேண்டுமெனவும் இவ் வகை கூறுதல்.
1. கருத்து: ஐயனே! தேர் கடவி வந்து தமியராய் இங்கு நின்று எம்மைப் பார்த்து இவ்வழி வந்த கடிய யானையைக் கண்டீரோ என வினவுகின்றீர். தம் புனத்துள் தினையைக் கொய்ய வரும் கிளிகளை ஓட்டுவாராகிய வளைந்த காதணியுடைய மகளிர் யானை வரும் வழியை நினைந்து நின்று கொண்டிருப்பரோ? 2. கருத்து: இவள் (தலைவி) புனங் காப்பவளும் அல்லள். இவனும் (தலைவனும்) மான் ஓடிவந்த வழியில் அதைத் தேடி வருபவனும் இல்லை. இவளோடு இவனிடை மறைந்த உள்ளம் கருதிய எண்ணம் வேறுஒன்று உண்டு. இருவரும் நமக்கு முன்னே நாணம் கொண்டார்போலக் காட்டித் தமக்குள்ளாகக் காட்சியின்பத்தால் மறைவாக கள்ளுண்டார் தம்முளே கொள்ளும் மகிழ்ச்சிபோல இருவரும் தம்முளே மகிழ்வர். தம் கண்களாலேயே பேச்சும் கொள்வர். |